Published : 10 Jan 2018 09:10 AM
Last Updated : 10 Jan 2018 09:10 AM

‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்

‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட், வரும் 12-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வணிகரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து 12-ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் சுமந்து செல்ல உள்ள 31 செயற்கைக்கோள்களில் ஒரு மைக்ரோ, ஒரு நானோ மற்றும் ஒரு ’கார்டோசாட்-2’ என்ற 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 28 செயற்கைக்கோள்கள் (3 மைக்ரோ, 25 நானோ) அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளில் இருந்து வணிகரீதியாக நம்முடைய ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன.

கார்டோசாட்-2

விண்ணில் செலுத்தப்பட உள்ள 31 செயற்கைக்கோள்களில் மிக முக்கியமானது ‘கார்டோசாட்-2’. அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டது. இதற்காக பிரத்யேக கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x