Published : 09 Jan 2018 09:40 PM
Last Updated : 09 Jan 2018 09:40 PM

ஆண்டாள் குறித்த வரலாற்றை சிதைத்து எழுதுவதா?- வைரமுத்துவுக்கு தமிழிசை கண்டனம்

கவிஞர் வைரமுத்து இன்று ஆண்டாள் குறித்த வரலாற்றை சிதைத்து எழுதியிருப்பது வருந்தத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது? பணம் வந்தது என்று பல வரிகளை தமிழை சிதைத்து பாடல் எழுதிய கவிஞர் இன்று வரலாற்றை சிதைத்து எழுதியிருப்பது வருந்தத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த வருத்தமும் மன்னிப்பும் கேட்பதில் கூட தயக்கம் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான் மேற்கோள் தானே காட்டினேன் என எழுதிய தப்பிற்கு வருந்தாமல் தப்பிக்கும் போக்கே தெரிகிறது. தமிழ் என்பது ஆன்மிகத் தமிழ் அதுவும் அண்ணா வளர்ப்பதற்கு முன்னாலேயே ஆண்டாள் வளர்த்தாள். ஆனால், பெரியார் தமிழை வளர்த்தார் என பொய்யாக சொல்பவர் பெரியாழ்வார் வளர்த்தார் என்பதை நம்ப மறுப்பதும் வைரமுத்துவை இப்படிப் பேச வைக்கிறது.

தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது மட்டுமே பண்படாமல் எழுதிய வாசககங்களுக்கு பதில் ஆகாது. உடனே கட்டுரையை மாற்றி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என உள்ளார்ந்து எழுத்துப்பூர்வமாகவும், கருத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும், இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப்போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் வலியுறுத்துகிறேன்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x