Published : 09 Jan 2018 08:18 PM
Last Updated : 09 Jan 2018 08:18 PM

41-வது புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது

 41-வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது. 706 அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் 13 நாட்கள் நடக்க உள்ள புத்தக கண்காட்சி புத்தகப் பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சி நாளை சென்னை தொடங்குகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக நாளை தொடங்க உள்ளது. சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது.

காலை நடக்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். இதில் தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா உள்ளிட்டோர் விருந்தினர்களாக பங்கேற்கும் விழாவில் பள்ளிக் குழந்தைகள் திரளாக கலந்துகொள்கின்றனர்.

தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டிமீடியா அரங்குகள் 22, பொது அரங்கு 24 என 708 அரங்குகளுடன் கண்காட்சி நடக்க உள்ளது. தமிழ் 236, ஆங்கிலம் 102, மல்டிமீடியா 14, பொதுவானவர்கள் 24 என 376 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

சாகித்ய அகாதமி, யூனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேசிய புத்தக நிறுவனம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம், பப்ளிகேஷன் டிவிசன், உ.வெ.சா. நூல் நிலையம், தஞ்சை சர்ஸ்வதி மஹால், தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், காந்தியன் லிட்டரேசன் சொசைட்டி போன்ற அமைப்புகளும் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

கண்காட்சி அரங்கில் வாசகர்களைக் கவரும் வண்ணம் பிரமாண்ட வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார். பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளன.

இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வண்ணம் திரையிட புத்தகக் கண்காட்சி வளாகத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த முன்னணி இயக்குனர்கள், கலைஞர்கள் 13 நாட்களும் பங்கேற்கிறார்கள்.

வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு என தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களும் முன்னணி எழுத்தாளர்கள் வாசகர்களுடன் உரையாட உள்ளனர். பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் 13 நாட்களும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களும் தலைசிறந்த ஆளுமைகள், சொற்பொழிவாளர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

வாசகர்கள் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. வாசகர்கள் பணமெடுக்க வசதியாக 2 ஏடிஎம் இயந்திரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வசதிக்காக 15 இடங்களில் ஸ்வைப் மெஷின் வசதி செய்யப்பட்டுள்ளது. வைஃபை வசதி, செல்போன் சார்ஜர் வசதி, வாசகர்கள் உணவருந்த தேவையான உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களை வரவேற்க ரைட்டர் பாஸ் என தனியாக வழங்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டைப்போலவே ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்க்காக 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் தயாராக உள்ளன. புத்தகக் கண்காட்சி தினமும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெறும். கண்காட்சி முழு ஏற்பாடுகளையும் பபாசி குழு செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x