Published : 03 Jan 2018 09:51 AM
Last Updated : 03 Jan 2018 09:51 AM

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன.

இதில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப்பள்ளி மாணவர்களின், “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவனும், ஆய்வுக்குழுத் தலைவருமான, எம்.சின்னக்கண்ணன் இந்த மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சின்னக்கண்ணனுக்கு இன்று ஈரோடு கலைக்கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x