Published : 03 Jan 2018 09:14 AM
Last Updated : 03 Jan 2018 09:14 AM

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

திமுக தலைவர் கருணாநிதியை இன்று (புதன்கிழமை) மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகவும் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அறிவிப்புக்குப் பின்..

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான டிசம்பர் 31 2017-ல் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நின்றுவிடாமல் இணையதளத்தையும் தொடங்கினார். இந்த இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வருகின்றனர். மேலும், கட்சிக் கொடியை உருவாக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேலி கிண்டல்கள் ஓய்ந்து 'ஆன்மீக அரசியல்' அறிவிப்பு தொடங்கி அடுத்தடுத்த சூடுபறக்கும் அவரது நடவடிக்கைகளும் தற்போது வாதவிவாதப் பொருளாகியுள்ள நிலையில் இன்று அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு சந்திப்பு நிகழ்ந்தால். தனிக்கட்சி அறிவிப்புக்குப் பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் அரசியல் தலைவர் கருணாநிதி என்ற நிலை உருவாகும்.

ரஜினி, தனது தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்ட நாளன்றே திமுக ஆதரவாளர் கவிஞர் வைரமுத்து ரஜினியை வாழ்த்தி வரவேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x