Published : 03 Jan 2018 08:37 AM
Last Updated : 03 Jan 2018 08:37 AM

தமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம்: முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 100 சித்த மருத்துவர்கள் உட்பட 105 உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக நாட்டிலேயே முதல்முறையாக சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ல் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் இதுவரை 10,680 மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் உட்பட 23,466 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது.

தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 100 சித்தா, ஒரு ஆயுர்வேதம் மற்றும் 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்கள் என 105 உதவி மருத்துவ அலுவலர்களை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாரம்பரிய முறையில் உயரிய சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவர்கள் 100 பேர் உட்பட 105 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவை யான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடையும் சூழல் உள்ளது. பணியாணை பெற்றுள்ள அனைத்து மருத்துவர்களும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் (பொறுப்பு) க.சண்முகம், சகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x