Published : 01 Jan 2018 08:29 PM
Last Updated : 01 Jan 2018 08:29 PM

சமூக நீதிக்கு எதிரான புதிய மருத்துவ ஆணையச் சட்டத்தை திரும்பப் பெறுக: அன்புமணி

சமூக நீதிக்கு ஆபத்து விளைவிக்கும் புதிய மருத்துவ ஆணையச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறி, இப்போதுள்ள இந்திய மருத்துவக் குழு சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட முன்வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சமூக நீதியை சிதைக்கும் வகையிலும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும் புதிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்திய மருத்துவக் குழு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவக் குழுவின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையற்றதாகவும், ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் இருப்பதால், அதை மாற்றியமைக்கவே புதிய சட்டம் இயற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நோக்கத்தை குறை கூற முடியாது. ஆனால், புதிய மருத்துவக் குழு சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அம்சங்கள் சமூக நீதிக்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக இப்போதுள்ள நடைமுறைப்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35% இடங்கள் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தகுதி அடிப்படையிலான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். மாறாக, பணம் வைத்திருப்போர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கூட தங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மிகவும் எளிதாக சேர்ந்து விடுவார்கள். இது மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கே வழி வகுக்கும். இது நீட் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது.

அதுமட்டுமின்றி, மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒரு வெளியேறும் தேர்வு (EXIT TEST) எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்ற முடியும். ஏற்கெனவே நீட் நுழைவுத்தேர்வு எழுதி, மருத்துவப் படிப்புக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது தேவையற்றது. இது ஏழை மற்றும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்களை மருத்துவப் பணியில் சேர விடாமல் தடுக்கும் திட்டமிட்ட சதியாகும்.

நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவக்குழு சட்டத்தின்படி தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இடங்களை மருத்துவக் குழுவின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு பிறகே அதிகரிக்க முடியும். ஆனால், புதிய சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பப்படி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யாமல் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதிப்பது மருத்துவக் கல்வியின் தரத்தை சீர்குலைக்கும். ஒருபுறம் மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்காக வெளியேறும் தேர்வை நடத்த வலியுறுத்தும் மத்திய அரசு மற்றொருபுறம் இப்படி செய்வது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

இவற்றுக்கெல்லாம் மேலாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொள்ள இந்தச் சட்டம் வகை செய்கிறது. இப்போதுள்ள மருத்துவக் குழுவுக்கு எல்லா மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், புதிய சட்டப்படி ஏற்படுத்தப்படும் மருத்துவ ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவர் அல்லாதவர்கள் ஆவர். மீதமுள்ள 5 பேர் மட்டுமே மருத்துவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், இந்திய மருத்துவ ஆணையத்தில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவமே கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் மருத்துவ ஆணையத்தை மருத்துவர் அல்லாதவர்கள் நிர்வகிப்பது பயனளிக்காது.

இந்திய மருத்துவக் குழுவில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதையும், அதில் நிலவும் ஊழலை ஒழிப்பதையும் பாமக வரவேற்கிறது. நாம் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோதே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால், களைகளை அழிப்பதற்காக தெளிக்கப்படும் மருந்து பயிர்களைக் கொன்று விடக்கூடாது. எனவே, புதிய மருத்துவ ஆணைய சட்ட முன்வரைவை திரும்பப்பெற்றோ, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பியோ சமூக நீதி மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்கிவிட்டு தாக்கல் செய்து நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறேன்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x