Published : 31 Dec 2017 01:26 PM
Last Updated : 31 Dec 2017 01:26 PM

தனக்குப் பின்னால் சாதியவாதிகளோ மதவாதிகளோ இல்லை என்பதை ரஜினி உறுதிப்படுத்துகிறார்: திருமாவளவன்

'சாதி மதச் சார்பற்ற' என்னும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ரஜினிக்குப் பின்னால் சாதியவாதிகளோ, மதவாதிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார் என்கிற வகையில் அவரது நிலைப்பாடுகளை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய தொண்டர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய வகையில், தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும், அதுவரை தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன், தன்னுடைய அரசியல் என்பது 'சாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியலாக' இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் பொதுமக்களுக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால், சாதியவாதிகளோடு, மதவாதிகளோடு கைகோக்கப் போவதில்லை என்பதையும், அதே வேளையில் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப்போவதில்லை என்றும் தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார் என்பதே ஆகும்.

அதாவது ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு என்பதை வேறுபடுத்திக்காட்ட அவர் முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்கு துணைப் போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரியவருகிறது. அதே வேளையில், கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அணிதிரட்ட விரும்புகிறார் என்றும் தெரிகிறது. அவருடைய 'ஆன்மீக அரசியல்' மதவாதத்திலிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது என்பதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

'சாதி மதச் சார்பற்ற' என்னும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவருக்கு பின்னால் சாதியவாதிகளோ மதவாதிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார் என்கிற வகையில் அவரது நிலைப்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x