Published : 25 Dec 2017 08:48 AM
Last Updated : 25 Dec 2017 08:48 AM

உண்டியலில் சேமித்த பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவர்கள்

உண்டியலில் சேமித்த பணத்தைக் கொண்டு மாணவர்கள் செங்கை புத்தக திருவிழாவில் புத்தம் வாங்கி சென்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்ற நிர்வாகிகள் இணைந்து 2-வது முறையாக புத்தகத் திருவிழா நடத்துகின்றனர். இந்த, புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை செங்கல்பட்டு அருகே மேலமையூர் இந்தியன் வங்கி அருகில் உள்ள ஏவிஎன் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 40 அரங்குகள், ஒரு லட்சம் தலைப்பிலான பல லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 3-ம் தேதி வரை நடக்கிறது.

முன்னதாக புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் உண்டியல் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்து புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது உண்டியல்களை எடுத்து வந்து புத்தக அரங்கில் அதை உடைத்து அதில் இருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.

இந்த நிகழ்வு புத்தக பதிப்பாளர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் மாணவர்களின் இந்த செயலைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. மாணவர்களை செங்கல்பட்டு சார் ஆட்சியர் வீ.பி.ஜெயசீலன் வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x