Published : 24 Dec 2017 03:44 PM
Last Updated : 24 Dec 2017 03:44 PM

ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார்: திருமாவளவன்

ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் தரப்பா? எடப்பாடி பழனிசாமி தரப்பா? என்பதை மனதில் வைத்தே ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தப் போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுகள் முடிந்த நிலையில் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். திமுக கூட்டணி வேட்பாளர் மருதுகணேஷ் மூன்றாவது இடத்தில் உள்ளார். அனைத்துச் சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டாலும்கூட இந்த நிலை மாறாது என்றே தெரிகிறது. உண்மையான அதிமுக எது? என்ற கேள்வியை முன்வைத்ததாக ஆர்.கே. நகர் தேர்தல் களம் மாறியதே முடிவு இப்படி அமைவதற்கு முதன்மையான காரணமாகும். அதாவது, ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் தரப்பா? எடப்பாடி பழனிசாமி தரப்பா? என்பதை மனதில் வைத்தே அந்தத் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தப் போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார்.

ஏற்கெனவே வரலாறு காணாத அளவுக்கு பணப் பட்டுவாடா நடந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது நடந்த தேர்தலிலும் அதிமுக மற்றும் தினகரன் தரப்பினர் போட்டிப் போட்டுக்கொண்டு ஒரு வாக்குக்கு ஆறாயிரம், பத்தாயிரம் எனப் பணப் பட்டுவாடா செய்தனர் என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. எனினும், தேர்தல் ஆணையத்தால் பண விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைவிட தோல்வி தேர்தல் ஆணையத்துக்கு என்பதே உண்மையாகும்.

பாஜக வேட்பாளர் 'நோட்டா' வாக்குகளில் பாதியைக்கூடப் பெற முடியவில்லை என்பது அந்தக் கட்சி ஒரு காலத்திலும் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதைக் காட்டுகிறது. அத்துடன், வகுப்புவாதம் இங்கே எடுபடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகச் சக்திகளுக்கு ஆறுதலாகும்.

பணநாயகக் கலாச்சாரமும் நாட்டுக்குப் மிகப் பெரும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும். வகுப்புவாதிகளும் ஊழல் சக்திகளும் கரம் கோத்துக்கொள்வார்கள் என்பதையே அண்மைக்கால தமிழக அரசியல் சூழல் உணர்த்தி வருகிறது. எனவே தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போவது 'மதச்சார்பற்ற ஜனநாயகமா' அல்லது 'வகுப்புவாதத்தோடு கூட்டுசேர்ந்த பணநாயகமா' என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்பிட வேண்டியவர்களாக உள்ளோம். மதச் சார்பற்ற ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும் என்கிற அடிப்படையில் அரசியல் களம் மாற்றியமைக்கப்படவேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் 'வாக்குக்குப் பணம்' கொடுக்காததன் மூலம் திமுக அணி வேட்பாளர் 'தார்மீக ரீதியான வெற்றி' பெற்றிருக்கிறார் என்பதை நேர்மையுள்ளவர்கள் மறுக்கமாட்டார்கள். இத்தகைய பணநாயக அரசியல் கலாச்சாரத்தையும் மீறி எதிர்காலத் தமிழகம் 'மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கே' என உறுதியாக நம்புகிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x