Published : 24 Dec 2017 10:22 AM
Last Updated : 24 Dec 2017 10:22 AM

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை அண்ணாநகர் பிரதான சாலை புது காலனியைச் சேர்ந்தவர் பழனி. பெயின்டர். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் மகன் ஸ்ரீகாந்த் (19), அப்பகுதியில் உள்ள தனியார் மருந்து குடோனில் இருந்து மருந்தகங்களுக்கு மருந்து வழங்கும் பணி செய்து வந்தார். கடந்த 20-ம் தேதி இரவு செங்குன்றத்தில் உள்ள மருந்தகத்துக்கு மருந்து வழங்கிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

செங்குன்றம் காமராஜர் திருமண மண்டபம் அருகே வந்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு சென்றது. கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ஸ்ரீகாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம், கண்கள் மற்றும் தோல் ஆகியவற்றை எடுத்தனர். ஒரு சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. இதயம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. கண்களை இரண்டு பேருக்கு பொருத்துவதற்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. தோல் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்படும் தோல் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால், 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x