Published : 23 Dec 2017 07:00 PM
Last Updated : 23 Dec 2017 07:00 PM

ஆர்.கே.நகரில் வெல்லப்போவது யார்? ஒரு அலசல்

ஆர்.கே.நகரில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வி இன்று அனைவர் முன்பும் உள்ளது. தங்கள் தரப்பு வெற்றிபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி முன்னெப்போதும் இல்லாத ஒருவித சிக்கலில் தேர்தலைச் சந்தித்தது. எம்ஜிஆர், கருணாநிதி, பின்னர் கருணாநிதி ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் தலைமையுடன் சந்தித்த தேர்தலில் தற்போது ஜெயலலிதா கருணாநிதி இல்லாத தலைமைகள் மோதும் ஒரு தேர்தலாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

2011 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிவேல் வென்றார்.  பின்னர் சிறைவாசத்தால் எம்.எல்.ஏ பதவியை இழந்த ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட்டபோது அவருக்காக 2015 இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியை வெற்றிவேல் விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்தார். அந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க, ஒரே எதிர்க்கட்சி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். விஐபி தொகுதியானது ஆர்.கே.நகர். ஆனால் அதன் பின்னர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 2015 இடைத்தேர்தலில் பெற்ற 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசத்தையோ, 1 லட்சத்து 60-க்கும் மேற்பட்ட வாக்குகளையோ ஜெயலலிதா பெறவில்லை என்றாலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழனை ஏறத்தாழ 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை தெலுங்கு பேசும் மக்கள், வன்னியர், நாடார், மீனவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பும் கலந்த ஒரு தொகுதியாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நிலையைப் பார்ப்பதற்கு முன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் முந்தைய வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

1952 பொதுத்தேர்தலில் வண்ணாரப்பேட்டை தொகுதியாக இருந்தது. 1949-ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான திமுக, தேர்தலில் போட்டியிடாத காலம் அன்று வடசென்னையில் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் இருந்த காலம். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜீவா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணப் பிள்ளையைத் தோற்கடித்தார். மீண்டும் 1957-ல் நடந்த தேர்தலில் ஜீவா 491 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முனியாண்டி நாடாரிடம் தோற்றார்.

1962-ம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக திமுக தேர்தலில் வண்ணாரப்பேட்டையில் நிற்க திமுக வேட்பாளர் வேதாச்சலம் 3 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் முனியாண்டி நாடாரிடம் தோற்றார். இரண்டு முறை வண்ணாரப்பேட்டையை தக்கவைத்த காங்கிரஸ் கட்சி 1967-ல் மிகப் பெரிய திமுகவின் எழுச்சி காரணமாக அதே திமுக வேட்பாளர் வேதாச்சலத்திடம் தொகுதியைப் பறிகொடுத்தது.

அதன் பின்னர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 1971-ல் எம்ஜிஆர், கருணாநிதி ஒன்று சேர்ந்து சந்தித்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த நிலையில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதாச்சலம் மீண்டும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

1977 அதிமுகவும், ஆர்.கே.நகரும் சந்தித்த முதல் தேர்தல்

வண்ணாரப்பேட்டையாக இருந்த தொகுதி 1977-ல் தேர்தல் சீர்த்திருத்த அடிப்படையில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் சுருக்கமாக ஆர்.கே.நகர் தொகுதியாக மாற்றப்பட்டது. 1977-ல் ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டபோது திமுக இரண்டாக உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவாகி சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. திமுக ஜனதாதளம் கூட்டணி, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக நடிகர் ஐசரிவேலன் போட்டியிட்டார்.

அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சீத்தாபதியை தோற்கடித்தார். சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஆர்.கே.நகர் மாற்றி அமைத்தது. முதன்முறை ஆர்.கே.நகரை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் வென்ற ஐசரிவேலன் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் துணை அமைச்சர் பதவி வகித்தார்.

1980-ல் எம்ஜிஆர்ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாபஅலையை மீறி திமுககூட்டணி வெற்றி:

1980-ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆர்.கே.நகர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐசரிவேலன் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரும் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவருமான ராஜசேகரனிடம் தோல்வியடைந்தார்.

1984 எம்ஜிஆர் சுகவீனம்,இந்திரா மரணம், அதிமுககூட்டணி வெற்றி

1984-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா மரணம், எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் ஆர்.கே நகரில் அதிமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனை தோற்கடித்தார்.

1989 தேர்தல்; இரண்டாக உடைந்த அதிமுக

திமுக வேட்பாளர் வெற்றி1989- சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜா, ஜெ என இரண்டாக பிளவுபட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்தலை சந்தித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனிடம் தோல்வியடைந்தார்.

1991- ராஜீவ் மரணம், அதிமுக வெற்றி

குறுகிய காலத்திலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட ஒன்றுபட்ட 1991 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் நிற்க ராஜீவ் கொலை காரணமாக எழுந்த அலையில் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதன் முறையாக வென்றார். திமுக வேட்பாளர் சற்குணபாண்டியன் தோல்வி அடைந்தார்.

1996 அதிமுக மீதானகடுமையான கோபம்; திமுகவெற்றி

1991லிருந்து 1996 வரை மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் வகையில் ஆட்சி நடத்திய ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், திமுக ஓரணியில் இணைந்ததால் தமிழகம் முழுதும் படுதோல்வியை அதிமுக சந்திக்க ஆர்.கே.நகரிலும் தோல்வியைத் தழுவியது. சற்குணபாண்டியன் மதுசூதனனை மீண்டும் தோற்கடித்தார்.

2001 கூட்டணி மாறியது;அதிமுக வென்றது

2001-ல் திமுக கூட்டணி உடைந்தது. மூப்பனார், இடதுசாரிக் கட்சிகள் அதிமுக அணியில் இணைய அதிமுக வென்றது. ஆர்.கே.நகரில் இம்முறை அதிமுக வேட்பாளர் சேகர்பாபு வெற்றிபெற்றார்.

2006-ல் தேமுதிகஎழுச்சி காரணமாக ஆட்சியைஇழந்த அதிமுக

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாக நிற்க மூன்று கூட்டணிகளாக இருந்த நிலையில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக ஆட்சி அமைத்தது. ஆனாலும் அதிமுக ஆர்.கே.நகரை தக்கவைத்தது.

2011 அதிமுக, தேமுதிக,இடதுசாரிகள் கூட்டணி; ஆட்சியைஇழந்த திமுக

2011 தேர்தலில் 2 ஜி விவகாரம் மற்றும் தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மிகப் பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றது. திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் சேகர்பாபு திமுகவுக்கு கட்சி மாறி போட்டியிட அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வெற்றிபெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தொகுதியில் அதிமுக தொடர் வெற்றி பெற்றது.

2015 இடைத்தேர்தல் எதிர்ப்பில்லாவெற்றிபெற்ற ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கு கைதுக்குப் பின் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த ஜெயலலிதாவுக்காக வெற்றிவேல் ராஜினாமா செய்ய இடைத்தேர்தலில் திமுக புறக்கணித்த நிலையில் ஆர்.கே. நகரில் வரலாறு காணாத 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார்.

2016 மூன்றாகப் பிரிந்தகூட்டணி, எளிதாக வென்றஜெயலலிதா

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்து நிற்க திமுக காங்கிரஸ் கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என மும்முனைப்போட்டியில் ஆட்சியைப் பிடித்தது அதிமுக. முதல்வர் தொகுதி என்ற முறையில் விஐபி அந்தஸ்து பெற்ற ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை ஜெயலலிதா தோற்கடித்தார்.

2016 ஜெயலலிதா மரணமும்,இடைத்தேர்தல் ரத்தும்

ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் தனி அணி, எடப்பாடி டிடிவி தினகரன் ஓரணி என்ற நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் முதன்முறையாக திமுக சார்பில் புதுமுகம் மருதுகணேஷ் நிறுத்தப்பட வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட பணமழை காரணமாக தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் நடந்திருந்தால் மதுசூதனன் வெல்லும் வாய்ப்பு அதிகம் இருந்தது. அடுத்து திமுகவுக்கு வாய்ப்பு இருந்தது என்று கூறப்பட்டது.

பிரிந்தவர் கூடினர், கூடியவர்பிரிந்தார்; வித்தியாசமானஇடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் கடந்த டிச.21ம் தேதி நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.24) நடைபெற உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலரும் போட்டியிட்டாலும் போட்டியின் முதல் மூன்று இடத்திலிருப்பவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மட்டுமே. இவர்களில் ஒருவர் வெல்லவே வாய்ப்பு உள்ளது என அவரவர் தரப்பினர் நம்புகின்றனர்.

கடந்த முறை ஆட்சி அதிகாரத்துடன் நின்ற டிடிவி தினகரன் இந்த முறை சுயேச்சையாக நின்றார். கடந்த முறை தனி அணியாக நின்ற மதுசூதனன் சகல அதிகார பலத்துடன் முதல்வர், அமைச்சர்கள் புடைசூழ களம் கண்டுள்ளார்.

திமுக சார்பில் நின்ற  வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதிக்கு புதியவர் என்றாலும் திமுகவின் இயல்பான வேகத்துடன் கூடிய பிரச்சாரம் இன்றி தனது போட்டியைத் தொடர்ந்தார்.

அனைவருக்கும் வாழ்வா, சாவா கவுரவப் போராட்டம்.  ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல், தேமுதிக ஒதுங்கிவிட்ட நிலையில் இரண்டாங்கட்ட தலைவர்கள் தலைமையில் நடக்கும் முதல் தேர்தல் இது.

வாழ்வா, சாவா?  கவுரவப் போராட்டம்

மு.க.ஸ்டாலின்

இந்த தேர்தல் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் சந்திக்கும் தேர்தல், அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கடுமையான கோபத்தையும், டிடிவி தினகரன் ஓட்டுகளைப் பிரிக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வெல்லாவிட்டால் இந்த சூழ்நிலையிலும் கூட வியூகம் வகுத்து வெல்ல முடியவில்லை என்ற நிலைக்கு ஸ்டாலின் தலைமை தள்ளப்படும்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்

இரட்டை இலை கிடைத்த பின்னர், ஆட்சி அதிகாரம், மதுசூதனன் என்கிற செல்வாக்கு மிக்க வேட்பாளர் என்ற பலத்துடன் தேர்தலில் வெல்ல வேண்டும். இந்தத் தேர்தலில் வென்றால் ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கூறலாம். நாங்கள்தான் ஒன்றுபட்ட அதிமுக என்று கூறலாம் என்கிற நிலையில் தோல்வியைத் தழுவினால் இரட்டை இலை சின்னம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது என்ற கருத்து வலுவாகிவிடும்.

டிடிவி தினகரன்

அதிமுக ஒதுக்கினாலும் நான் யார் என்று காட்டுகிறேன், என் பின்னால் அனைவரும் வரும் நேரம் வரும் என்று துணிச்சலுடன் களம் இறங்கியுள்ள டிடிவி தினகரன் வென்றால் மிகப் பெரும் விஸ்வரூபம் எடுப்பார். குறுகிய காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் என்ற நிலைக்கு தினகரன் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் தினகரன் வெற்றிபெற்றால் அது அதிமுக தலைவர்களுக்கு பலத்த பின்னடைவையும் சோர்வையும் உருவாக்கும், மாறாக தினகரன் தோல்வி அடைந்தால் அவருக்கும் அரசியல் பயணத்தில் சிக்கல் உருவாகும்.

ஆனால் 10 ஆயிரம் வாக்குகள் பெற்றாலும் அது தினகரனுக்கு வெற்றியே என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆகவே அனைவருக்குமே இந்தத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கு உரைகல் என்றால் அது மிகையாகாது.

யாருக்கு வெற்றிக்கனி?

அதிமுக எளிதாக வெல்லும் என ஆரம்பத்தில் உற்சாகமாக இறங்கிய மதுசூதனன் தற்போது டிடிவி தினகரனின் வேகத்தால் பாதிக்கப்படுவார், அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளை டிடிவி தினகரன் கட்டாயம் பிரிப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

திமுக நிதானமாக செயல்பட்டாலும் திமுகவின் வாக்கு வங்கி மாற்றுக்கட்சிக்கு செல்லப் போவதில்லை, தினகரனின் எழுச்சியினால் பிரியும் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என்றும் திமுக நிர்வாகிகள் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.

ஆனாலும் திமுகவின் வாக்கு வங்கிகளான இஸ்லாமியர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் தினகரனை நம்புகின்றனர் என்ற கருத்து உருவாகி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆர்.கே.நகர் வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட அதிக அளவில் பதிவான 77 சதவீத வாக்குப்பதிவும், பணப் பட்டுவாடாவும் கடந்த பத்து நாட்களாக தினகரனுக்கு ஆதரவாக தொகுதி உள்ளது என்று சொன்னவர்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 4 பொதுத்தேர்தலிலும் அதிமுக வசமே இந்த தொகுதி உள்ளது, சராசரி 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ள தொகுதி ஆர்.கே.நகர்.

திமுக முன்னதாக அதிமுகவை தோற்கடித்தது அதிமுக பலகீனமாக இருந்த 1989, 96 ஆண்டுகளில் மட்டுமே. ஆகவே திமுக தனது வாக்கு வங்கியை தக்கவைத்து அதற்கு மேல் வித்தியாசத்தையும் தாண்டினால் மட்டுமே ஆர்.கே.நகர் திமுக வசமாகும்.

டிடிவி தினகரனும் கணிசமான வாக்குகளைப் பெற  வாய்ப்புள்ளது அதில் திமுகவின் வாக்குகளும் அடங்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது.

தினகரன் வாங்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே யார் வெற்றி பெறுவார் என்பது தீர்மானிக்கப்படும். ஒரு வேளை ஆளுங்கட்சி வென்றாலும் கடந்த தேர்தலைப் போல அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இருக்காது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மக்களின் தீர்ப்பே இறுதியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x