Published : 20 Dec 2017 12:56 PM
Last Updated : 20 Dec 2017 12:56 PM

ஜெ. வீடியோ வெளியீடு: வெற்றிவேல் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிய ராஜேஷ் லக்கானி உத்தரவு

ஜெயலலிதா சிகிச்சை பற்றிய பல தகவல்கள் உலாவந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற வீடியோவை வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்.22 அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அவர் சிகிச்சை பெற்றது குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பினர். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் நீதி விசாரணை கோரினார்.

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், டிடிவி தினகரன் சுயேச்சையாகவும், மருது கணேஷ் திமுக சார்பிலும் நிற்கும் இந்த தேர்தலில் பிரச்சாரம் நிறைவுப்பெற்று நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் இன்று காலை திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல்.

இது தேர்தல் விதிமீறல் ஆகாதா? என்ற கேள்விக்கு, "ஆர்.கே.நகர் ஒரு தொகுதி இது தமிழகம் முழுதும் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் எழுப்புபவர்கள் கண்டபடி பேசுவதை மனம் பொறுக்க முடியாமல் வெளியிடுகிறேன், நான் இதை வைத்து தேர்தல் பிரச்சாரமா செய்கிறேன்?" என்று வெற்றிவேல் பதிலளித்தார்.

தேர்தல் விதிமீறல் என்று பல அரசியல் கட்சித்தலைவர்கள் பதிலளித்தபோதும் தேர்தல் ஆணையம் பதிலளிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தேர்தல் விதிமீறல் ஆகும். ஆகவே அவர்மீது விதிமீறல் வழக்கு 126(1பி) கீழ் வழக்குப்பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x