Published : 19 Dec 2017 11:56 AM
Last Updated : 19 Dec 2017 11:56 AM

14 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி அசத்தல்: தேசிய இளைஞர் விருதுக்கு குமரி இளம்விஞ்ஞானி தேர்வு

14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாஷா நசீம்(24). மாஷா நசீம் சிறுவயதில் இருந்தே ஏராளமான அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கி வந்துள்ளார். இதையடுத்து மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது. வரும் ஜனவரி 12 முதல் 17-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்துவிடம்’ மாஷா நசீம் கூறியதாவது:

பர்குலர் அலாரம்

நான் 9-ம் வகுப்பு படித்த போது, 14 வயதில் பர்குலர் அலாரத்தை கண்டு பிடித்தேன். இதன் மூலம் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம். அப்போதே எனது தந்தை காஜா நஷீம் என்னை ஊக்குவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் இன்று வரை தொடர்வதால் ஆர்வத்துடன் புதிய கண்டுபிடிப்புகளில் இறங்கினேன். எம்.டெக் படித்துள்ள நான் இதுவரை மொத்தம் 14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கியுள்ளேன். எனது முய்சிகளுக்கு கணவர் அப்துல் பாஷிக் உறுதுணை புரிகிறார். இதில் முக்கியமானது நெருப்பு இல்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கை பயன்படுத்தி சீல் வைக்கும் கருவி. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் இரு வாக்குச் சாவடி மையங்களில் இம்முறை அமல்படுத்தப்பட்டது.

தேடி வந்த விருதுகள்

எனது கண்டு பிடிப்புகளுக்காக ஜனாதிபதி விருது, சர்வதேச விருது ஆகியவற்றை இரண்டு முறையும், ஐந்து முறை தேசிய விருதும் பெற்றுள்ளேன்.

எனக்கு பின்னால் வரும் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக மாஷா ஆக்கத்திறன் மையத்தையும் நிறுவினேன். இதன் மூலம் 6 பேர் இதுவரை பல்வேறு விருதுகள் பெற்றுள்ளனர்.

மறைந்த ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் தான் எனக்கு ரோல் மாடல். 6 முறை அவரை நேரில் சந்தித்து எனது கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கியுள்ளேன். உச்சி முகர்ந்து அவர் என்னை பாராட்டினார். குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியும் எனது கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து என்னை மிகவும் பாராட்டினார். இதுவரை 100-க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பும் எடுத்துள்ளேன்.

நிறைவை தருகிறது

கடந்த 2016-ம் ஆண்டு மாநில இளைஞர் விருதை அப்போதைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றேன். இளம் தலைமுறைகளை ஊக்குவிப்பதால் தேசிய இளைஞர் விருதுக்கு என்னை தேர்வு செய்திருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகமான விஞ்ஞானிகளை உருவாக்குவதே லட்சியம் என்றார் அவர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x