Published : 19 Dec 2017 10:32 AM
Last Updated : 19 Dec 2017 10:32 AM

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தற்கொலை

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், தற்போதைய உடற்கல்வி இயக்குநருமான கே.அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தைச் சேர்ந்தவர் கே.அங்கமுத்து (58). இவரது மனைவி விஜயலட்சுமி(56) அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அங்கமுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகவும், அதன் பின்னர் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு பதிவாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் உடற்கல்வி இயக்குநராக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சேலம் வந்த நிலையில், அவரது நிகழ்ச்சிகளில் அங்கமுத்து பங்கேற்கவிருந்தார். இந்நிலையில், நேற்று காலை திடீரென வீட்டில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

அங்கமுத்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக நீண்டகாலம் பணிபுரிந்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் இவர் பதிவாளராக பணிபுரிந்தபோது, பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகவும், அது தொடர்பான கோப்புகள் மாயமானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காக அங்கமுத்து விண்ணப்பித்து இருந்ததாகவும், அது ஆளுநர் மாளிகையில் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 16-ம் தேதி, பல்கலைக்கழக ஆவணங்கள் மாயம் தொடர்பாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கமுத்து தற்கொலை தொடர்பாக பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x