Published : 15 Dec 2017 09:24 PM
Last Updated : 15 Dec 2017 09:24 PM

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவதற்காக கடலூர் சென்றுவிட்டு திரும்பும் போது புதிய கல்பாக்கம் அருகே அவருக்கு பாதுகாப்புக்கு வந்த பொலிரோ ஜீப் மோதி சிறுவன் உட்பட மூன்று பேர் பலியானார்கள்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுதும் ஆய்வு நடத்தி வருகிறார். இன்று கடலூர் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வு நடத்தினார். ஆளுநர் ஆய்வுக்கு வருவதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். கடலூரில் ஸ்வச் பாரத் கழிவறை ஆய்வுக்கு ஆளுநர் சென்றபோது பாத்ரூமில் இளம்பெண் குளிக்கும் போது ஆளுநரை அழைத்துச் சென்றதாக புகார் எழுந்தது. ஆனால் ஆளுநர் தரப்பு அதை மறுத்துள்ளனர்.

இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது.

கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக்(11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா(70) என்ற மூதாட்டி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x