Last Updated : 14 Dec, 2017 11:38 AM

 

Published : 14 Dec 2017 11:38 AM
Last Updated : 14 Dec 2017 11:38 AM

திருச்செந்தூர் கோயிலில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். மேலும், திருப்பூரைச் சேர்ந்த பக்தர் உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி குகை அருகே வடக்கு வாசல் பகுதியில், வெளிப்பிரகாரமான கிரிவலப் பாதை மண்டபத்தின் மேற்கூரை நேற்று காலை 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. 20 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் கூரை ஒட்டு மொத்தமாக இடிந்ததில், அப்பகுதியில் மோர் விற்றுக் கொண்டிருந்த திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள் (42) என்பவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும், அப்பகுதியில் சுக்குவெந்நீர் விற்பனை செய்து கொண்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த பக்தர் கந்தசாமி(74) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி, இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பக்தர்கள் அதிகம் இல்லாத நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் நிகழவில்லை. மேற்கூரை இடிந்த பகுதியில் இருந்த தூண்கள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் மூலம் உடனடியாக இடித்து அகற்றப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

வெளிப் பிரகாரத்தின் கூரை இடிந்து விழுந்த பகுதி சுமார் 44 ஆண்டுகள் பழமையானது. 20 மீ., நீளம் 15 மீ., அகலத்துக்கு கூரை இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பின்னரே வெளிப்பிரகாரப் பகுதிக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதுவரை பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த விபத்தை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. அனைத்து பூஜைகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர், கோயிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. இது முடிந்ததும் மதியம் 1 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சின்னப்பத் தேவர் கட்டியது

வெளிப்பிரகார மண்டபத்தை மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளரும், முருக பக்தருமான சாண்டோ சின்னப்பத் தேவர் உபயமாக 1974-ல் கட்டிக் கொடுத்தார். அதன் பிறகு, அறநிலையத்துறையின் முறையான பராமரிப்பு இல்லாததாலேயே வெளிப்பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களின் கட்டிட ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய உடனடியாக கள ஆய்வு மேற்கொள்ளவும் அறநிலையத்துறை ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x