Published : 13 Dec 2017 11:15 AM
Last Updated : 13 Dec 2017 11:15 AM

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் புதுகை மீனவர்கள் 23 பேர் கைது: துப்பாக்கியால் சுட்டு ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

புயல் பாதிப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து 10 நாட்களுக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 396 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், நெடுந்தீவு பகுதியில் 5 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன், எஸ்.பிரகாஷ், சி.சேகர், பி.மணி, என்.சக்திவேல், எஸ்.மகாராஜா, நடராஜன் மகன் சக்திவேல், எ.ராஜேந்திரன், கே.வினோத், டி.குமார், டி.இளமதி, சொக்கலிங்கம் மகன் சேகர், எம்.ராஜா, கே.பாண்டி, வி.பெரியகருப்பு, கே.அன்பு, எஸ்.தீபாவளி, டி.ராஜாங்கம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பி.ஜேசுராஜ், எ.முருகேசன், எ.அப்துல்லா, கே.சேக், வி.பாண்டி ஆகிய 23 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.

மேலும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்று, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 10-ம் தேதி கடலுக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இங்கு வந்து மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டு மீனவர்களை விரட்டினர்.

ஒக்கி புயலுக்கு பின்னர், 2 வாரம் கழித்து கடலுக்குச் சென்ற முதல்நாளே இலங்கை கடற்படையினர் விரட்டியதால், குறைந்த அளவு மீன்களுடன் அவசர அவசரமாக கரை திரும்பியதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x