Published : 10 Dec 2017 09:27 AM
Last Updated : 10 Dec 2017 09:27 AM

நடுக்கடலில் 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக தகவல்: செல்போன்கள், அடையாள அட்டைகள் சிக்கியதாக மீனவர்கள் கூறினர்

குமரி மாவட்டம் நீரோடியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் மாயமான நிலையில், சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர்களது படகில் இருந்து செல்போன்கள், அடையாள அட்டைகள் சிக்கின. ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியில் இருந்து கடந்த நவ. 20-ம் தேதி ராகிணி என்ற விசைப்படகில் 13 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 28-ம் தேதி வரை அவர்கள் தங்களது உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஒக்கி புயலுக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.

5 படகுகளில் தேடுதல்

அவர்களைத் தேடுவதற்காக கடந்த 6-ம் தேதி தூத்தூரில் இருந்து 5 படகுகளில் 32 மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் நேற்று மதியம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பி வந்தனர். அங்கு மீனவர்கள் குவிந்தனர். பாதுகாப்புக்காக போலீஸாரும் அதிகம் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராமச்சந்திரன், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், அரசு செயலாளர்கள் ககன்தீப்சிங் பேடி, ராஜேந்திரகுமார், ஜோதி நிர்மலா மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர். தேடுதல் பணிக்கு சென்று கரை திரும்பிய மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சடலங்கள் மிதந்தன

மீனவர்கள் கூறியதாவது: தேங்காய்பட்டினம் கடல் பகுதியில் இருந்து 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் தேடும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, கடலில் 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் மிதப்பதைப் பார்த்து அதிச்சியடைந்தோம். மிகவும் உருக்குலைந்து காணப்பட்டதால் அவற்றை மீட்க முடியவில்லை. அருகே உடைந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த படகில் கிடந்த பையை மீட்டோம். அதில், 8 செல்போன்களும், இரண்டு அடையாள அட்டைகளும் இருந்தன. அந்த அடையாள அட்டைகள் நீரோடியை சேர்ந்த மனோஜ், சுனில்குமார் ஆகியோருடையவை. இவ்வாறு மீனவர்கள் கூறினர். செல்போன்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

மாயமான மீனவர்கள் கதி என்ன என்பதை உறுதிப்படுத்த முடியாததால் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து முறையாக விசாரித்து உண்மை நிலையை கண்டறியவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x