Published : 08 Dec 2017 09:45 PM
Last Updated : 08 Dec 2017 09:45 PM

சர்ச்சைக்குரிய நிதித் தீர்வு, வைப்பீடு காப்பீட்டு சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

மக்களின் பணத்தை வங்கிகள் பறிக்கும் வகையில் உள்ள புதிய சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நலிவடையும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கான புதிய அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ள சில பிரிவுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்போதுள்ள நடைமுறைப்படி வங்கிகள் நெருக்கடிக்கு ஆளானால், அந்த வங்கிகளுக்கு அரசே நிதி உதவி செய்து காப்பாற்றும். ஆனால், புதிய சட்டத்தின்படி வங்கிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்காது. மாறாக, வங்கியில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள நிதியை பயன்படுத்தி நெருக்கடியை வங்கிகளே சமாளித்துக் கொள்ள வேண்டும். இது மிகத் தவறானது.

புதிய சட்டப்படி மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை, குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பீடாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு மிகக் குறைந்த வட்டி வழங்கவும் வங்கிகளுக்கு அதிகாரமளிக்கப்படும். ஏற்கெனவே உள்ள வைப்பீடுகளின் கால அளவை அதிகரிக்கவும், வட்டி அளவை குறைக்கவும் முடியும். இதனால், குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்ப விழாக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் செய்துள்ள முதலீடுகளை அவர்களுக்கு தேவையான நேரத்தில் எடுக்க முடியாது. இதனால் வங்கிச் சேமிப்பு, வைப்பீடு ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்கள் சிதைக்கப்பட்டு விடும்.

எனவே, புதிய சட்டம் குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் அதைப் போக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மத்திய நிதி அமைச்சகமும், நிதி அமைச்சரும் கூறி வருகின்றனர்.

வங்கிகள் அமைக்கப்பட்டதன் நோக்கமே வாடிக்கையாளர்களின் பணத்தை காப்பதும், வளர்ப்பதும்தான். அதற்கு மாறாக வாடிக்கையாளர்களின் பணத்தைப் பறிக்கும் சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. எனவே சர்ச்சைக்குரிய நிதித் தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு சட்டத்தை அரசு கைவிட வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x