Published : 08 Dec 2017 10:05 AM
Last Updated : 08 Dec 2017 10:05 AM

அதிமுகவின் வலிமையை நிரூபிக்க ஆர்.கே.நகரில் வெற்றி அவசியம்: முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

அதிமுகவின் தேர்தல் பணிமனையை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, ‘கட்சியின் வலிமையை நிரூபிக்க ஆர்.கே.நகரில் வெற்றி அவசியம்’ என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை எஸ்.என்.செட்டி சாலையில் அதிமுகவின் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதைத் திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, தண்டையார்பேட்டை 47- வது வட்டம், ஹரிநாராயணபுரத்துக்கு சென்ற அவர்கள், அங்குள்ள பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

திறந்த ஜீப்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி, இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் இருந்தனர். பிரச்சாரத்தின்போது முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

இது வரலாற்று சிறப்புமிக்க தேர்தல். இந்த தேர்தல் வெற்றி, அதிமுகவின் வலிமையை நிரூபிக்கும். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டுதான் ஜெயலலிதா தமிழக முதல்வரானார். அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு திட்டங்களை வாரி வழங்கினார். பொதுமக்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றினார். திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் இந்த தொகுதி வளம்பெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவர் 5 ஆண்டுகள் மேயராக இருந்தார். மாநகராட்சியில் இந்த தொகுதியும் வருகிறது. அப்போது எதுவும் செய்யவில்லை. அதன் பின், துணை முதல்வர், உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதும் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் இந்த தொகுதிக்கு விடிவுகாலம் பிறந்தது. கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் வருவதற்கு மதுசூதனனும் காரணம்,

இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “1991-ல் மதுசூதனன் எம்எல்ஏவாக இந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். இந்த தொகுதியில் அடிப்படை பணிகள் செய்துள்ளார். அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களின் பொருளாதார நிலை உயரவும் பாடுபடுவார். இத்தொகுதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு, தேர்தல் முடிந்ததும் தரமான வீடுகள் கட்டித்தரப்படும்’’ என்றார்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x