Published : 07 Dec 2017 09:30 AM
Last Updated : 07 Dec 2017 09:30 AM

நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர், அதிகாரிகளுடன் 45 நிமிடம் ஆளுநர் ஆலோசனை: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு இன்று பயணம்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்து கிறார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 25-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், தூய்மை பாரதம் திட்டத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த குப்பைகளை கையால் அள்ளி குப்பைத் தொட்டிகளில் போட்டார்.

அங்குள்ள கடைக்காரர்களிடம் தூய்மை பாரதம் திட்டம் தொடர்பாக ஆங்கிலத்தில் விளக்கினார். ஆளுநரின் செயலாளர் அதை தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர், மாநகர நல அலுவலர் பொற்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசிய ஆளுநர், “நான் எப்போதாவதுதான் இங்கு வருகிறேன். நீங்கள் இங்கேயே இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு ஒருமுறையாவது பேருந்து நிலையத்துக்கு வந்து துப்புரவு பணிகளை கண்காணிக்க வேண்டும். திறந்தவெளிகளை கழிப்பிடமாக்குவதைத் தடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

பின்னர், தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார். மாணவி ஒருவரை அழைத்து, மக்கள் மத்தியில் அந்த துண்டு பிரசுரத்தை வாசிக்கும்படிச் செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

வீடுகளில் குப்பை சேகரிப்பு

தொடர்ந்து, பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை பகுதிக்கு வந்த ஆளுநர், வீடுகளுக்குச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து, துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார். தொடர்ந்து, வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஆளுநர் வந்தார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க 13 முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந் தனர்.

அதிகாரிகள் விளக்கம்

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார். திட்ட செயல்பாடுகள், வருங்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த விவரங்களை பவர்பாயின்ட் இயந்திரம் மூலம் ஆளுநருக்கு அதிகாரிகள் விளக்கினர். திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில், கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு தடையான விஷயங்கள் குறித்தும் அதிகாரிகளிடம், ஆளுநர் கேட்டார்.

மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அப்போது தெரிவித்தார்.

‘திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்ந்து கண்காணிப்பேன். அதிகாரிகள் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்களை ஆளுநர் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண் டார்.

இன்று குமரி பயணம்

இன்று காலை கன்னியாகுமரிக்குச் செல்லும் தமிழக ஆளுநர், அங்கு காலை 9 மணி முதல் 12 மணி வரை புயல் சேதங்களைப் பார்வையிடுகிறார். மீட்புப்பணிகள் குறித்தும், அரசின் திட்டச் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் மதியம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x