Published : 02 Dec 2017 09:41 AM
Last Updated : 02 Dec 2017 09:41 AM

லாபத்தை காட்டிலும் சந்தை மதிப்பு முக்கியம்: இந்திய ரீடெய்ல் சங்க நிகழ்ச்சியில் தைரோகேர் வேலுமணி பேச்சு

லாபத்தை விட சந்தை மதிப்பு முக்கியம். ஒரே இடத்தில் வியாபாரம் செய்யும் போது லாபம் மட்டுமே கிடைக்கும். சந்தை மதிப்பை உயர்த்த வேண்டும் என்றால் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி பேசினார். இந்திய ரீடெய்ல் சங்கம் சார்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார். மேலும், சென்னையில் ஒரு பகுதியில் மட்டுமே ரீடெய்ல் நிறுவனம் நடத்தினால் லாபம் மட்டுமே கிடைக்கும், அதுவே சென்னையில் பல இடங்களில் நடத்தும் போது நிறுவனத்தின் மதிப்பு சிறிதளவு உயரும். மேலும் தமிழ்நாடு, தென் இந்தியா, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் என விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அடுத்தடுத்து உயரும் என வேலுமணி கூறினார்.

இதுதொடர்பாக இந்திய ரீடெய்ல் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலனிடம் பேசிய போது, “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் நிகழ்ச்சியை நடத்துகிறோம். தற்போது மதிப்பு, சந்தை மதிப்பு ஆகிய விஷயங்கள் குறித்து ரீடெய்ல் நிறுவனங்கள் தெரிந்துகொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரீடெய்ல் சம்பந்தமான நிகழ்ச்சி என்றாலே இ-காமர்ஸ் குறித்த கேள்வி அனைவருக்கும் எழுகிறது. 130 கோடி மக்களின் தேவைகளை ஒரு சில நிறுவனங்கள் பூர்த்தி செய்ய முடியாது. அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்ற சந்தை இங்கு இருக்கிறது.

வென்ச்சர் கேபிடல் முதலீடு என்றாலே, தொழில்நுட்பம், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் ரீடெய்ல் துறையில் சில நிறுவனங்களுக்கு வென்ச்சர் கேபிடல் முதலீடு கிடைத்துள்ளது. அதனால் முதலீடு தொடர்பாக ஒரு அமர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரீடெய்ல் துறையில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் ரீடெய்ல் துறையில் உள்ள பெண் தொழில்முனைவோர்கள் மட்டும் பங்கு பெறும் அமர்வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரீடெய்ல் நிறுவனங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துளசி பார்மசியின் நிர்வாக இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மற்ற பிரிவுகளை விட பார்மா துறை யில் ரீடெய்ல் நிறுவனங்கள் சிறப்பாக செயல் பட முடியும். உதாரணத்துக்கு சில மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்க வேண்டி இருக்கும். அப்படி பராமரிக்கவில்லை என்றால் அந்த மருந்து சரியாக வேலை செய்யாது. சமீபத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு நடந்தது. அப் போது சரியான வெப்பநிலையில் பராமரிக்கவில்லை என்றால், உத்தரவாதம் ஏதும் வழங்க முடியாது என மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. தவிர மருத்து வாங்கும் போது வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து செயல்பட முடியும். உதாரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒரு சர்க்கரை நோய்க்கான மருந்து மற்றும் ஆண்டிபயாடிக் ஆகியவற்றை 30 நாட்களுக்கு (முந்தைய பில்லை அடிப்படை யாக வைத்து) கேட்டார். பொதுவாக ஆண்டிபயாடிக்கை அதிக நாட்களுக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையை பார்த்தால், அந்த பரிந்துரை சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பரிந்துரை என தெரிய வந்தது. அதன் பிறகு வாடிக்கையாளரை மீண்டும் மருத்துவரிடம் செல்வதற்கு அறிவுறித்தினோம். இதனால் ரீடெய்ல் பார்மா நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.

இந்திய ரீடெய்ல் சங்கம், விர்ச்சுவஸ் ரீடெய்ல், ‘தி இந்து’ நாளிதழின் வணிகவீதி இணைப்பிதழ் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரீடெய்ல் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x