Published : 01 Dec 2017 02:13 PM
Last Updated : 01 Dec 2017 02:13 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தனர்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலக பகுதிக்கு ஏராளமான தொண்டர்களும் உடன் வந்தனர். அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர்.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து மதுசூதனனும், டி.ஜெயக்குமாரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

‘‘அதிமுகவின் சின்னமும், கொடியும் எங்களுக்கே சொந்தம். இதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி டிடிவி தினகரன் எங்கள் கொடியை பயன்படுத்தி வருகிறார், இதற்கு அவருக்கு உரிமையில்லை. தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றி புகார் அளிப்போம்.

அதுபோலவே வேட்புமனுத் தாக்கல் செய்ய வெளி மாவட்டங்களில் இருந்து நபர்களை கூட்டி வந்துள்ளார். இதுபற்றியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்குகேட்போம். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’’ எனக் கூறினர்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன்பாக மதுசூதனன் வீட்டிற்கு, மக்களவை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் மதுசூதனனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் மதுசூதனன் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x