Published : 30 Nov 2017 11:58 AM
Last Updated : 30 Nov 2017 11:58 AM

நம்ம சொன்னாலும் திட்டுவாங்க அவங்களும் கடைசி நிமிஷம்வரை சொல்ல மாட்டாங்க: ஓகி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

கன்னியாகுமாரி மாவட்டத்தில் 'ஓகி' புயலால் கனமழை பெய்துவருவதாக வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று விடிய விடிய நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும் அதற்கு 'ஓகி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சற்றுமுன் அவர் பதிவு செய்த ஃபேஸ்புக் நிலைத்தகவலில், "கன்னியாகுமரி பகுதியில் 'ஓகி' புயலால் பலத்த காற்று வீசுகிறது. கனமழை பெய்கிறது. இது கன்னியாகுமரி பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. இருப்பினும், யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். பத்திரமாக இருங்கள். மரத்தின் கீழ் நிற்காதீர். குறிப்பாக ரப்பர் மரங்களின் கீழ் நிற்காதீர்கள். அவை வெகு எளிதாக முறிந்துவிழும் தன்மை கொண்டவை.

ரேடாரை கண்காணித்தீர்கள் என்றால் 'ஓகி' புயல் எவ்வாறு நகர்கிறது என்பதை உங்களாலும் கணிக்க முடியும். கன்னியாகுமாரிக்கு சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்படுவது அரிதினும் அரிதான நிகழ்வு. இப்போதே நல்ல வலுவான நிலையில் புயல் இருக்கிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. புயல் அந்தப் பகுதியில் இருந்து நகர்ந்த பின்னர் அதைப்பற்றி அறிவிப்பதில் என்ன பயனிருக்கும்.

நம்ம சொன்னாலும் திட்டுவாங்க அவங்களும் கடைசி நிமிஷம்வரை சொல்ல மாட்டாங்க" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மாலை 'ஓகி’  புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசி, பலத்த மழை பெய்யும் நிலையில், அதிகாரபூர்வமாக புயல் உருவானதை அறிவிப்பதை கடைசி நிமிடம் வரை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x