Published : 29 Nov 2017 03:37 PM
Last Updated : 29 Nov 2017 03:37 PM

ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி: டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவிற்கும் இடையில்தான் போட்டி. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு என டிடிவி தினகரன் கூறினார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை சசிகலாவிடம் தெரிவித்தேன். அவரது ஆசியையும் பெற்றேன். ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களுக்கும், திமுகவிற்கும் இடையில்தான் போட்டி. இரட்டை இலையை எதிர்த்து வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி.

எங்கள் அணியில் இருந்த எம்.பி.க்கள் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் பக்கம் சென்றதால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. இந்த அரசு பெரும்பான்மை இல்லாத அரசு, மக்கள் விரும்பாத அரசு. சட்டப்பேரவையில் ஓட்டெடுப்பு நடத்தும்போது நாங்கள் யார் என்பது தெரியும். என் கருத்தை 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் என கூறும் அமைச்சர்களுக்கு ஓட்டெடுப்பு நடக்கும் போது எங்கள் பலம் புரியும்.

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தவறான தீர்ப்பு அளித்துள்ளது. உரியமுறையில் பரிசீலிக்காமல் அவசர கதியில் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம். உச்ச நீதிமன்றம் சென்று இரட்டையை இலையை திரும்பப் பெறுவோம்'' என தினகரன் கூறினார்.

இதைத் தொடர்ந்து,  ஜெயலலிதாவின் மகள் என பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா கூறிவருவது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''1985-ம் ஆண்டு முதல் போயஸ் தோட்டம் சென்று வருகிறேன். ஜெயலலிதாவின் உறவினர் யாரையும் பார்த்ததில்லை''எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x