Published : 28 Nov 2017 05:46 PM
Last Updated : 28 Nov 2017 05:46 PM

சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் முறைகேடு; விசாரணை தேவை: அன்புமணி

அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மாருத்துவமனைகள் ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர்கள் நிலையில் சிறப்பு மருத்துவர்களை நியமித்ததில் மிகப் பெரிய அளவில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, முதுநிலைப் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருப்போர் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க பெரும் ஊழலும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 556 சிறப்பு மருத்துவர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்கள். இவர்களை தேர்வு செய்வதில் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. வழக்கமாக அரசு மருத்துவமனைகளுக்கு உதவி மருத்துவர்களை நியமிப்பதாக இருந்தால் கூட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வு நடத்திதான் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை உதவிப் பேராசிரியர் நிலையிலான சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்வதில் இந்த நடைமுறைகள் எதுவும் பெறப்படவில்லை. அவ்வளவு ஏன் விண்ணப்பங்கள் கூட பெறப்படவில்லை. மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் மூலம் உடனடி நேர்காணல் அறிவிக்கப்பட்டு, அதில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின் அதிகாரிகளும் காட்டிய வேகம் மெய்சிலிர்க்க வைத்தது. தேர்வு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அனைவருக்கும் கடந்த 17, 18 ஆகிய நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பணியிடம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த மூன்றாவது நாளில், அதாவது நவம்பர் 21-ம் தேதி சென்னையில் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் ஆட்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளனர். ஆனால், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டப்பட்டதற்கு காரணம் ஊழல்தான். சிறப்பு மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 556 பேரில் 441 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் ஆவர். ஒவ்வொரு பணியிடத்திற்கும் லட்சக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டுதான் அவர்களுக்கு அவசர, அவசரமாக நியமன ஆணை வழங்கப்பட்டதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்பட்டது. அவர்கள் படித்து முடித்த பிறகுதான் சிறப்பு மருத்துவர்கள் நியமனமே நடைபெறும். அதற்குப் பிறகு மீதமுள்ள இடங்களில்தான் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாத, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் பணியாற்ற வேண்டும் என்று உறுதிமொழி பத்திரம் பெறப்படுவதாலும், அவர்கள் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் சேவை செய்து வருவதாலும் இவ்வாறு செய்யப்படுகிறது.

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் எந்த உறுதிமொழிப் பத்திரமும் எழுதித் தருவதில்லை, அரசு சேவையும் செய்வதில்லை எனும் போது அவர்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கு காரணம் கையூட்டு என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதுமட்டுமின்றி, சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு கூட பின்பற்றப்படவில்லை. யாரெல்லாம் பணம் கொடுத்தார்களோ, அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அடுத்த 4 மாதங்களில் மருத்துவ மேற்படிப்பை முடித்து வரும் போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியிடம் இருக்காது என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.

தகுதி திறமையுடன் அரசு கல்லூரிகளில் படித்து, அரசு மருத்துவமனைகளில் சேவை செய்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை வழங்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணம் செலுத்தி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் நோக்கத்தை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் கிடைத்த அரசு நிர்வாகமும், விஜயபாஸ்கர் கையில் கிடைத்த சுகாதாரத் துறையும் எதன் கையிலோ கிடைத்த பூமாலையைப் போன்று சீரழிந்து கொண்டிருக்கின்றன. குட்கா விற்பனை முதல் மருந்து கொள்முதல் வரை அனைத்திலும் கையூட்டு வாங்கிக் குவிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்திலும் ஊழலை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் விளைவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சீரழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க வேண்டிய இடம் அரசுக்கு உண்டு. இட ஒதுக்கீட்டு விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்துவிட்டு, அரசு சேவையில் உள்ள மருத்துவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும். இதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி வரும் ஆளுநர் இப்பிரச்சினையில் தலையிட்டு நீதி வழங்கினால் நன்றாக இருக்கும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x