Published : 28 Nov 2017 11:50 AM
Last Updated : 28 Nov 2017 11:50 AM

என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அந்த மூன்று எம்.பி.,க்களும் அணி மாறினர்: டிடிவி தினகரன்

எடப்பாடி அணிக்கு தாவிய மூன்று எம்.பி.க்களும் தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கு சென்றதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர். தினகரன் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் எடப்பாடி அணிக்கு தாவினர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "தனிக்கட்சி தொடங்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை. ஏனெனில் அதிமுகவே எங்களது இயக்கம். இரட்டை இலை சின்னத்தை வசப்படுத்துவோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம். எடப்பாடி அணிக்கு தாவிய மூன்று எம்.பி.க்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கு சென்றனர். எங்கே தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் அங்கு சென்றனர்" என்றார்.

எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த தினகரன், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக கொடியையே நாங்கள் பயன்படுத்துவோம். சின்னம் குறித்தே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதே தவிர கொடி குறித்தும் கட்சி அலுவலகம் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, தனிக்கட்சிக்கும் அவசியமில்லை; தனியாக கொடி பயன்படுத்தவும் அவசியம் இல்லை.

ஆர்.கேநகரில் நாங்கள்தான் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, ஜெயலலிதா ஆட்சியை அமைக்க ஆதரவு தாருங்கள் என பிரசாரம் செய்வேன். தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சியை எதிர்காலத்தில் வீட்டுக்கு அனுப்புவேன்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x