Published : 27 Nov 2017 06:48 AM
Last Updated : 27 Nov 2017 06:48 AM

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரம்: அன்புச்செழியன் மீதான பிடி இறுகுகிறது - மேலும் இருவரின் கந்துவட்டி புகார் குறித்தும் விசாரணை தீவிரம்

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் மீதான பிடி இறுகி வருகிறது. அடுத்த கட்டமாக தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சிவி.குமார் அளித்த கந்துவட்டி புகார் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் (43). இணை தயாரிப்பாளராக இருந்தார். கடந்த 21-ம் தேதி வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக 2 பக்கங்களில் தற்கொலைக்கான காரணங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். அதில் பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதாகவும், அதற்காக வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று 7 வருடங்களாக வாங்கியவர், கடந்த 6 மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தியாகராயநகர் துணை ஆணையர் பி.அரவிந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களிலும் தேடி வருகின்றனர். வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக இயக்குநர் சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீஸார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அன்புச்செழியனிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்து வரும்படி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, சி.வி. குமார் உள்ளிட்டோரும் காவல் நிலையத்தில் கந்து வட்டி புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட எல்லைக்குள் உள்ள காவல் நிலையங்களிலோ புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த தயங்க மாட்டோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க அன்புச்செழியன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x