Last Updated : 22 Nov, 2017 02:02 PM

 

Published : 22 Nov 2017 02:02 PM
Last Updated : 22 Nov 2017 02:02 PM

புதுச்சேரியில் 5-வது நாளாக பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் தொடர்ந்து 5 வது நாளாக பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிமனையிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பஸ்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்களில் ஒரு பிரிவினர் பணிக்குத் திரும்பியதால் நேற்று காலை வரை 11 பஸ்கள் இயக்கப்பட்டன. பெண் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி அதில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புதுச்சேரி,காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை இந்த நிலையில் மூன்றாவது நாளான திங்கள்கிழமை இரவு, நிர்வாக இயக்குனர் குமார், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் பேருந்துகளை இயக்கப்போவதாக நிரந்தர ஊழியர்கள் அறிவித்தனர்.

இதனிடையே பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை எனக்கூறி ஒப்பந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒப்பந்த ஊழியர்களான தங்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றும் வரை பேருந்துகளை இயக்கவிடமட்டோம் என தெரிவித்தனர்.

நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு புதுச்சேரியில் நேற்று இரவு 3 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

ஒப்பந்தத் தொழிலாளர்களை தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த உறுதியளிக்க வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில், நிரந்தரப் பணியாளர்களின் ஒரு பிரிவினர் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்துக்கு 3 பஸ்களை நேற்று இரவு கொண்டு வந்தனர்.

முதலாவதாக நாகர்கோவில், சென்னை மற்றும் குமுளி பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், ''3 சங்கங்களில் இருந்து 3 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 105 பஸ்கள் உள்ளன. பெரும்பான்மையோனர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். வேலை நிறுத்தம் முடிவடையவில்லை" என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை வரை 11 பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் திருப்பதி பஸ்ஸை பணிமனையில் இருந்து எடுத்து வந்ததற்கு, அங்கிருந்த பெண் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து பாதுகாப்புடன் பஸ்நிலையத்துக்கு பஸ்ஸைக் கொண்டுவந்தனர். 90க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கமாலேயே இருந்தது.

அத்துடன் இரண்டாம் நாளாக ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தொழிற்சங்கத்தினரும் இணைந்து காலையில் சிற்றுண்டியும், மதியம் உணவையும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

தனியார் பஸ்கள் இயக்கம்: பிஆர்டிசி பேருந்துகள் 5வது நாளாக இயக்கப்படாத நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கம்போல் தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x