Last Updated : 21 Nov, 2017 11:46 AM

 

Published : 21 Nov 2017 11:46 AM
Last Updated : 21 Nov 2017 11:46 AM

மாதங்கள் உருண்டோடுகின்றன.. மனங்கள்?- ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பும் மைத்ரேயனின் சூசக பதிவும்

அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இரு அணிகளும் பெயரளவில்தான் இணைந்துள்ளன இன்னமும் இறுக்கம் குறையவில்லை என்று அவ்வப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அதிமுக எம்.பி.,யும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

'இணைந்த அணிகள்'

ஆகஸ்ட் 21-ம் தேதி, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார்.

 

தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார். கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இணைப்பின்போது பேசிய ஓபிஎஸ், "தொண்டர்கள் விருப்பப்படி அணிகள் இணைப்பு நடைபெற்றது. இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது. அணிகள் இணைப்பு நடந்ததால் என் மனப் பாரம் எல்லாம் இறங்கிவிட்டது" என்றார்.

முழு அதிகாரத்துக்கு வித்திட்ட பொதுக்குழு..

அணிகள் இணைப்பைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ல், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில், முக்கிய தீர்மானமாக கட்சியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று தீர்மானம் போடப்பட்டது. கட்சியின் வழிக்காட்டுதல் குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டு வழிகாட்டு குழுத்தலைவர் ஓபிஎஸ், இணைத்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கட்சியில் முடிவெடுக்கக்கூடிய முழு அதிகாரம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு என்றும் வழிகாட்டு குழு மூலம் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.

கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவும், இணைக்கவும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் கட்சியின் முழு அதிகார அமைப்பாக ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் மாறினர்.

இப்படி அதிகார அமைப்பாக இருவரும் மாறியிருந்தாலும் இன்னமும் இருமனங்கள் இணையவில்லையோ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் இருந்தேவந்தது. டிடிவி தினகரன் தரப்பும் இதை சுட்டிக்காட்டி இரு அணிகள் இணைப்பும் கண் துடைப்பு என பிரச்சாரம் செய்துவருகிறது.

இத்தகைய நிலையில்தான் "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பதிவின் மூலம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு ஒட்டவைக்கப்பட்ட உடைந்த கண்ணாடிதான் என்பதை யாருக்கு உணர்த்த விரும்புகிறார் டாக்டர்.மைத்ரேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x