Published : 17 Nov 2017 08:57 AM
Last Updated : 17 Nov 2017 08:57 AM

ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக 5,191 பக்க குற்றப்பத்திரிகை: மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2012-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர்உ.சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆட்சியர் பதவியில் இருந்து சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகே அந்த அறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளில் அப்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஆகியோர் அதிரடி ஆய்வு நடத்தினர். அதைத் தொடர்ந்து, பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான பிஆர்பி கிரானைட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி யின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்த குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இது தவிர, அரசுக்குச் சொந்த மான இடங்களில் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் நிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்களாகப் பணிபுரிந்த அன்சுல் மிஸ்ரா, சுப்பிரமணியம் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிரானைட் முறைகேடு தொடர்பான 98 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு தடை கோரி கிரானைட் அதிபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 23 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், அரசு தரப்பு வேண்டுகோளை ஏற்று, இந்த தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக்கொண்டது. இதையடுத்து கிரானைட் முறைகேடு வழக்குகளில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸ் தரப்பில் அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 77 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.259 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர்களான துரை தயாநிதி, நாகராஜன், ஓய்வுபெற்ற கனிமவளத் துறை அதிகாரி ஜவஹர் உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு போலீஸார் 2012-ல் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆர்.ஷீலா, டிஎஸ்பி குருசாமி, காவல் ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர்.

கிரானைட் முறைகேடு தொடர் பான வழக்குகளில் இதுவரை எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை பக்கங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடவில்லை. ஒரே நாளில் 4 வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 4 வழக்கில் சேர்த்தும் இந்த அளவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இல்லை. தற்போது துரை தயாநிதிக்கு எதிரான இந்த வழக்கில் 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஆர்.ஷீலா கூறும்போது, ‘‘இந்த வழக்கில் ஆவணங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் குற்றப்பத்திரிகை 5 ஆயிரம் பக்கங்களை தாண்டியுள்ளது. எஞ்சிய 20 வழக்குகளிலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் உயர் நீதிமன்றம் விசாரணை ஆணையம் அமைத்தது. அதன்படி, மதுரையில் பல மாதங்களாக முகாமிட்டு விசாரணை நடத்திய சகாயம், உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x