Published : 14 Nov 2017 09:37 PM
Last Updated : 14 Nov 2017 09:37 PM

திமுகவை விமர்சிப்பது ராமதாஸுக்கு எந்த வகையிலும் உதவாது: பொன்முடி

இமயம் போல வளர்ந்து நிற்கும் திமுகவை விமர்சிப்பது ராமதாஸுக்கு எந்த வகையிலும் உதவாது என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்முடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுகவை விமர்சிக்காவிட்டால் அறிக்கை வெளியிடும் நிறைவும், நிம்மதியும் இருக்காது. பலமுறை பதிலளித்து புளித்துப்போன பழைய விமர்சனங்களை அவ்வப்போது அவர் எழுப்பி வருவது வேதனை அளிக்கிறது.

ராமதாஸ் நேற்று (நவம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில், 'நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான் புகுத்தியது' என கூறியிருக்கிறார். மருத்துவர் பட்டம் பெற்றுள்ள அவர், மருத்துவக் கல்விக்காக திமுக அரசு செய்த சாதனைகளை மறைத்து விட்டு திமுக மீது புழுதி வாரி இறைத்துள்ளார்.

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதனை முதலில் எதிர்த்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்போது முதல்வராக இருந்த அவர், நீட் தேர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திமுக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காமல் பார்த்துக் கொண்டார். திமுக ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்தான், நீட் தேர்வு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதை ராமதாஸுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எங்கோ நடந்த வருமானவரித் துறை சோதனைகளுக்கு சர்க்காரியா கமிஷன் பற்றியெல்லாம் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத சர்க்காரியா கமிஷன் பற்றி திடீரென பேசுவதன் பின்னணி என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது. ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வாழப்பாடி ராமமூர்த்தி புத்தகமே வெளியிட்டுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததற்காக கருணாநிதிக்கு ராமதாஸ் பாராட்டு விழா நடத்தினார். திமுக ஆட்சியில் வன்னியர்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு திமுக மீது பழி சுமத்தியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினர் மீதான வருமானவரித் துறை சோதனைகள் குறித்தும், மாநிலத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி பற்றியும் ராமதாஸ் நேரடியாக விமர்சிக்கலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இமயம் போல வளர்ந்து நிற்கும் திமுகவை விமர்சிப்பது அவருக்கு எந்த வகையிலும் உதவாது. திமுகவை விமர்சித்து வன்னியர் சமுதாயத்தில் அங்கும், இங்குமாக தனக்கு இருக்கும் ஆதரவையும் ராமதாஸ் இழந்துவிட வேண்டாம்'' என்று பொன்முடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x