Published : 14 Nov 2017 08:09 PM
Last Updated : 14 Nov 2017 08:09 PM

தொண்டைமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை தேவை: சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம்

சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில், ''இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து நீக்கி வரும் இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இலங்கை அரசின் இந்த கண்டனத்துக்குரிய நடவடிக்கைகள் மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு இந்தியத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர்களுடைய பங்களிப்பையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியிருக்கிறது. மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியத்துக்காகவும் சவுமியமூர்த்தி தொண்டைமான் பாடுபட்டார் என்ற உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.

சவுமியமூர்த்தி தொண்டைமான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கவாதியாக குரல் கொடுத்தார், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திருத்தக் குழுவின் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்ததோடு, இலங்கையின் அதிபர்கள் பலரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி இந்தியத் தமிழர்களின் நலனுக்காக பங்காற்றியிருக்கிறார்.

என்னதான் இலங்கையை, இந்தியா நட்பு நாடாக கருதினாலும், அதனுடைய வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை செய்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு மாறாகவே இலங்கை செயல்பட்டு வருகிறது என்பதை ஏமாற்றத்துடன் நினைவுபடுத்த விரும்புகிறேன். இலங்கை அரசு ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கு உரிய, அவர் ஏற்றுக் கொள்ளும்படியான அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமலும், மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரித்து தண்டிக்க நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுதந்திரமான விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது.

தற்போது, மலையகத் தமிழர்களின் அன்புக்குரியத் தலைவர் சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை அகற்றி, அவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை.

எனவே, சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை நீக்கும் உணர்வுபூர்வமான நடவடிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதோடு, அந்த பெருமைமிக்கத் தலைவரின் பெயருக்கும் புகழுக்கும் எந்தவகையிலும் களங்கம் ஏற்படாமலும், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் அவருடைய பெயரை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கடிதத்தை திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இன்று மாலை 6.30 மணி அளவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x