Published : 14 Nov 2017 06:44 PM
Last Updated : 14 Nov 2017 06:44 PM

இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?- திருநாவுக்கரசர் கண்டனம்

இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது அத்துமீறி இந்திய கடலோர காவல்படையினர் சுடப்பட்டத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடலில் மீன்பிடிக்கச் செல்கிற மீனவர்கள் மீது எந்த தாக்குதலும் இருக்காது, மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுப்போம், மீனவர்களுக்கென மத்திய அரசில் தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம் என்று ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய பாஜக ஆட்சியில் இந்திய கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட நரேந்திர மோடி ஆட்சிதான் மீனவர்கள் மீதான இத்தகைய தாக்குதலுக்கு முழுப் பொறுப்பாகும். தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரண நடத்தப்பட வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு மத்திய பாஜக அரசு தெளிவான விளக்கத்தை தருவதோடு, இனியும் இத்தகைய தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை கண்டித்து மீனவ அமைப்புகள் ராமேஸ்வரத்தில் நாளை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதை ஆதரிக்கும் வகையில் மீனவர்களின் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இத்தாக்குதல் குறித்து சென்னை உயர் நீதிமன்றமே தானே முன்வந்து விசாரிக்க முனைந்திருப்பதை வரவேற்கிறேன். மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க மத்திய - மாநில அரசுகள் தவறிய நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆணை பிறப்பிக்கும் என நம்புகிறேன்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x