Published : 14 Nov 2017 10:39 AM
Last Updated : 14 Nov 2017 10:39 AM

இது சோதனை காலம்: வைரலாகும் ‘தொண்டன்’ வசனம்

சமுத்திரக்கனி நடித்து இயக்கி, கடந்த மே மாதம் வெளிவந்த திரைப்படம் ‘தொண்டன்’. அவருடன் விக்ராந்த், சுனைனா, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த படம். சாதி அரசியல், பெண்களுக்கு எதிரான கொடுமை, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் என்று காட்சிக்குக் காட்சி பல்வேறு பிரச்சினைகளை அலசிய இந்தப் படம், பணப் பதுக்கல், வருமானவரித் துறை சோதனை ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை.

அமைச்சர் வீட்டு மருமகனாக, 15 பவுனுக்கு அலையும்‘இலைக்கடை ராமர்’ கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் கலக்கியிருப்பார் சூரி. மிடுக்கான வருமானவரித் துறை அதிகாரியாக தம்பி ராமையா வருவார். வருமானவரித் துறையினரின் சோதனையில், அந்த வீடே களேபரமாக இருக்கும். திரும்பிய இடமெல்லாம் கரன்ஸிகளும், நகைக் குவியலுமாக இருக்கும்.

சூரிக்கே தெரியாமல் அவரது பெயரில் இந்தூரான் பேங்குல 77 கோடியே 66 லட்ச ரூபாய், ஐயெம்ஏ பேங்குல 20 கிலோ கோல்டு பிஸ்கட், மேலூர்ல ஏழு கல்குவாரி, துபாய்ல கடலுக்கு அடியில 7 பங்களா ஆகியவற்றை அமைச்சர் குடும்பம் பினாமி சொத்துகளாக வாங்கியிருப்பதாக அதிகாரி தம்பி ராமையா அடுத்தடுத்து கூற, கேட்கக் கேட்க அதிர்ச்சியாவார் சூரி.

இதில் அவர் பேசும் வசனம்தான் ஹைலைட்.. ‘‘ஏண்டா டேய் மாப்புள, இதெல்லாம் திம்பீங்களாடா? பத்துற அளவுக்குதான்டா அள்ளி வாய்ல வக்க முடியும். இல்லன்னா விக்கிக்கிரும்டா. சொந்தக்காரன், வேலக்காரன், சமையல்காரன் எல்லாப்பேரு பேர்லயும் சொத்த வாங்கிட வேண்டியது. அவிங்ககிட்டயும் சொல்றதுல்ல. இவிங்களும் அதை அனுபவிக்கிறதில்ல. கடைசில பொசுக்குனு போய்ச் சேர்ந்துர்றது. மொத்தமும் அனாதச் சொத்தாப் போய்ரும். அதை இருக்கும்போதே நாலு பேருக்கு கொடுத்து சந்தோசப்படுத்துங்களேன்டா. ஏன்டா, ஒரு மனுசன் வாழ்றதுக்கு பதினஞ்சு பவுன் பத்தாதாடா...’’

தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருந்திப் போகும் இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.. தொடர்ந்து 5-வது நாளாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x