Published : 14 Nov 2017 10:32 AM
Last Updated : 14 Nov 2017 10:32 AM

சசிகலா உறவினருக்குச் சொந்தமான கர்ஸன் எஸ்டேட்டில் ஜெ.வின் திராட்சை தோட்ட பத்திரம் பதுக்கல்?- உதகையில் மட்டும் விசாரணை தொடர்வதால் சந்தேகம்

சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் நேற்றும் சோதனை தொடர்ந்தது. அங்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்ட சொத்து பத்திரம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகே கர்ஸன் எஸ்டேட் கிரீன் டீ தொழிற்சாலையில், கடந்த 9-ம் தேதி முதல் 5-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதாலேயே, கர்ஸன் எஸ்டேட்டில் சோதனை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

கூட்டுறவு வங்கியில் டெபாசிட்?

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கோடநாடு எஸ்டேட்டில் இருந்ததாகவும், அந்த பணத்தை மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியினர் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பிரித்து கொடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்து, வெள்ளையாக மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கர்ஸன் எஸ்டேட் சொத்து பத்திரம் பாங்க் ஆஃப் இந்தியாவில் இருப்பதாகவும், கர்ஸன் எஸ்டேட் மூலதனம் குறித்தும் இந்த எஸ்டேட்டில் உயர் ரக கிரீன் டீ உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தேயிலையை சந்தைப்படுத்த எந்தெந்த நாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஜெ. சொத்து மாற்றமா?

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம், அவர் இறந்த பின்னர் சசிகலா குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அந்த ஆவணங்கள் கர்ஸன் எஸ்டேட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால்தான் சோதனை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இன்றும் சோதனை

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவடைந்துவிட்ட நிலையில், கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் நேற்றும் சோதனை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரித் துறையின் இந்த சோதனை இன்றும் (நவ.14) தொடரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x