Published : 13 Nov 2017 02:37 PM
Last Updated : 13 Nov 2017 02:37 PM

பொங்கல் வரை சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை: கிலோ ரூ.180 ஆக உயர்வு

சின்னவெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அனைத்துக் குடும்பங்களிலும் வெங்காயமும், தக்காளியும் சமையல் அறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இவைகளின்றி உணவு சமைத்தால் முழு திருப்தி ஏற்படாது. பல வீடுகளில் இவைகளின்றி உணவே தயாரிக்க முடியாது. அதிலும் சிறிய வெங்காயத்தின் சமைத்தால், அதன் சுவையே தனி.

அத்தகைய சிறிய வெங்காயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ஈரோடு, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், பல்லடம், திருப்பூர், தலைவாசல் போன்ற பகுதிகளில் அதிக அளவு விளைகிறது.

கர்நாடகாவில் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால், நஞ்சன்கோடு ஆகிய பகுதிகளில், சிறிய வெங்காயம் பெருமளவு கிடைக்கும்.பெரிய வெங்காயம், வட மாநிலங்கலான மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கிடைக்கும். சின்னவெங்காயம் கடந்த 3 மாதங்களாக ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.80 லிருந்து 100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம் கடந்த சில வாரங்களாக ரூ.150 முதல் 180 வரை நீடிக்கிறது.

இதனால் காய்கறி சந்தைகளிலும் சின்ன வெங்காய விற்பனை சொற்ப அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தைத் தான் அனைத்து வியாபாரிகளும் விற்பனை செய்கின்றனர்.

விளைச்சல் பாதிப்பு

இதுகுறித்து பண்ருட்டி காய்கறி சந்தை மொத்த வியபாரி பாஸ்கர் என்பவர் கூறுகையில், “சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால், அவை விற்பனைக்கு வரவில்லை. தற்போது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே மக்கள் அவ்வளவு விலை கொடுத்து வாங்கத் தயாரில்லை. கர்நாடாகவில் பெய்த மழை காரணாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைந்து 10 லாரிகளில் வந்திறங்கிய சின்ன வெங்காயம் இன்று ஒரு லாரியில் பாதியளவுக்கு கூட வருவதில்லை.

பெரம்பலூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் இப்போது தான் விதைக்கத் துவங்கியுள்ளனர்.எனவே அவை அறுவடை முடிந்து மார்க்கெட்டுக்கு வர 3 மாதங்களாகலாம். பொங்கல் பண்டிகை வரை சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. இதே போல் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், கேரட் ரூ.60-க்கும், பழைய இஞ்சி ரூ.70-க்கும் விற்பனையாகிறது” என்றார். பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்திருந்த சிலர், “வெங்காயமும், தக்காளியும் இல்லாமல் சமைக்க முடியாது. ஆனால் இவை இரண்டும் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால், அவைகளின்றி உணவு சமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலைகளை குறைக்க அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x