Published : 11 Nov 2017 12:22 PM
Last Updated : 11 Nov 2017 12:22 PM

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா? 1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துவது எதற்காக. இந்த சோதனைகளின் பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்தார்.

சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது:

‘‘வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைபற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சோதனைகள் நடந்தன. அப்போதும் நாங்கள் அஞ்சவில்லை. தற்போது நடைபெறும் வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். இதற்காக 350 கார்களை பயன்படுத்தியுள்ளனர். வருவமான வரி சோதனை நடத்தும் முறை, குறிப்பிட்ட நபர்களை குறி வைத்து நடத்தப்படும் வருமான வரி சோதனையை தான் எதிர்க்கிறோம். அதனால் தான் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சேதானை நடைபெறுவதாக கூறுகிறோம். இதை உறுதிபடுத்தி ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சேகர் ரெட்டியை வளர்த்தவர்கள், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிப்பவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற வில்லை. ஆனால், தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டில் கூட வருமான வரி சோதனை நடைபெறுகிறது. 15 கிலோ தங்கமும், 5.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது தகவல் தான்.

இது கணக்கில் காட்டப்பட்ட பணமாக கூட இருக்கலாம். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும். எனது பண்ணை வீட்டில் பாதாள அறை எதுவும் இல்லை. எம்பியாக இருந்து பென்ஷன் வாங்குபவரிடம் இவ்வளவு சொத்துக்களா என கேள்வி எழுப்புகின்றனர். அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?

அரசியலை விட்டு எங்களை ஒதுக்க வேண்டும் நினைப்பவர்களின் சதி நிறைவேறாது. சிறிய கட்சி என்று எங்களை கேலி செய்கின்றனர். தேர்தல் வந்தால் தெரியும் எங்களின் பலம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x