Published : 05 Nov 2017 05:07 PM
Last Updated : 05 Nov 2017 05:07 PM

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:

''இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும். சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறை நாம் திரும்பச் செய்கிறோம்.

37 வருட உழைப்பு பஞ்சுமிட்டாய் போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். அவ்வளவே. பணக்காரர்கள் மட்டும் முறையாக வரி கட்டினால் போதும். நாடு ஓரளவு சரியாகிவிடும்.

தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன். இதையெல்லாம் பதவிக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். பதவிக்காக நான் பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை.

நான் பதவிக்காக அரசியலை கையிலெடுக்கவில்லை. என் குடும்பத்திலும் பல இந்துக்கள் உள்ளனர். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

கட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என சொல்கிறார்கள். அதற்கான பணத்தை ரசிகர்கள் தந்துவிடுவர். அதனால் பயம் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும்.

நவம்பர் 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடத் தேவையில்லை. அது கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்'' என்று கமல் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x