Published : 01 Nov 2017 06:31 PM
Last Updated : 01 Nov 2017 06:31 PM

பேசும் படங்கள்: மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலி-மின் இணைப்பு பெட்டிகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டும் மின்வாரியம்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு பள்ளிமாணவிகள் உயிரிழந்த நிலையில் வடசென்னையின் பல பகுதிகளில் மின் இணைப்பு பெட்டி பராமரிப்பின்றி உயிர் பலி வாங்கும் கருவிகளாக மிரட்டி வருகிறது.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். அவர்கள் காலை 11 மணிக்கு உயிரிழந்த நிலையில் மதியம் 3 மணி வரை மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அங்குள்ள பெண்கள் குற்றம்ச்சாட்டினர்.

சென்னையில் மழைக்காலம் துவங்கும் முன்னரே அரசின் அனைத்து துறைகளும் அடங்கிய அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் மின்வாரியமும் அடக்கம். சென்னையில் மின்சார வயர்கள் மழைநீரில் அறுந்து விழுந்து விடாமல் இருக்கவும், மின் இணைப்பு பெட்டிகள் மழை நீரில் மூழ்கினால் மின் இணைப்பை துண்டித்து விபத்திலிருந்து காப்பது உட்பட பல ஆலோசனைகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

ஆனாலும் வழக்கம் போல் ஆலோசனைகள் ஆலோசனைகளாக இருந்ததன் விளைவு இரண்டு சிறுமிகள் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சென்னையில் இது போன்ற பல இடங்களில் மின் இணைப்பு பெட்டிகள் மின் வயர்கள் வெளியே கிடக்கும் நிலையில் உயிர்பலி வாங்கும் அபாயக்கருவிகளாக இருப்பதை இன்றைய புகைப்படங்கள் காட்டுகின்றன.

சென்னை ஆடுதொட்டி அருகே சாலையில் தண்ணீர் விடும் மூதாட்டி ஒருவர் பக்கத்திலேயே ஆபத்தான முறையில் மின் இணைப்பு பெட்டி திறந்து கிடக்கிறது. இதனால் மின்சாரம் எந்த நேரமும் தண்ணீர் பிடிக்கவரும் பெண்களையும் தண்ணீர் விடும் மூதாட்டியையும் தாக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய போது தண்ணீர் தொட்டி அருகே மின் இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் இருப்பதை புகாராக அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x