Published : 30 Oct 2017 09:53 AM
Last Updated : 30 Oct 2017 09:53 AM

கிரானைட் கொள்ளை குறித்துசிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பொருளாதாரத்தையே சீர்குலைத்த மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. கிரானைட் ஊழல் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி, ‘இதுகுறித்து சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கிரானைட் ஊழலால் அரசுக்கு ரூ.1.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும் அரசு கூறியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதுதான் அரசின் கடமையாகும். ஆனால், கிரானைட் கொள்ளையால் அதிக இழப்பு ஏற்படவில்லை என்பதும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்பதும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயலாகவே தோன்றுகிறது.

கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ தலைமையிலான பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

கிரானைட் நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களை உலகளாவிய ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். கிரானைட் குவாரிகளை அரசுடமையாக்கி, விதிகளின்படி கற்களை வெட்டி எடுத்து நியாயமான விலையில் விற்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x