Published : 27 Oct 2017 03:16 PM
Last Updated : 27 Oct 2017 03:16 PM

மது போதையில் தொலைக்காட்சி பார்ப்பதில் தகராறு: சினிமா உதவி இயக்குநர் கொலை, நண்பர் கைது

வளசரவாக்கத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த திரைத்துறையைச் சார்ந்த உதவி இயக்குநர்களுக்குள் தொலைக்காட்சியை பார்ப்பதில் மது போதையில் ஏற்பட்ட மோதலில் தள்ளிவிடப்பட்டதில் ஒருவர் மரணமடைந்தார். இதற்குக் காரணமான நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் எம்.ஆர்.ஆர்.கார்டன் கைகாங்குப்பத்தில் ஒரு வீட்டில்முருகன், டார்வின், தனசூர்யா, முத்துக்குமார், சதீஷ் குமார்,செல்வ திருப்பதி, கார்த்திக், அகில் கண்ணன் ஆகிய 8 இளைஞர்கள் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சினிமாத்துறையில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு 9 மணி அளவில் கார்த்திக்(35), என்பவர் அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது போதையில் வெளியிலிருந்து வந்த அகில் கண்ணன்(35) என்பவர் எரிச்சலில் கார்த்திக் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர். இதில் ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் திடீரென அகில் கண்ணனை பிடித்து தள்ளியதில் போதையில் இருந்த அகில் கண்ணன் பின்பக்கமாக சுவற்றில் மோதி விழுந்துள்ளார்.

இதில் அகில் கண்ணன் பின்பக்க மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக உடனிருந்த நண்பர்கள் காயமடைந்த அகில் கண்ணனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு ஸ்கேன் எதுவும் எடுக்காமல் காயத்துக்கு எட்டு தையல் போட்டு சிகிச்சை அளித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த அகில் கண்ணன், அதிகாலை 3 மணி அளவில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை சோதித்ததில் அவர் இறந்து போனது தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திக் கே.கே.நகர் போலீஸில் நடந்ததைக் கூறி சரணடைந்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த அகில் கண்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த அகில் கண்ணனின் சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த சிலுக்குவார்ப்பட்டி ஆகும். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் நண்பர்களுடன் அறையில் தங்கியிருந்த அகில் கண்ணனின் மரணம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x