Last Updated : 23 Oct, 2017 12:12 PM

 

Published : 23 Oct 2017 12:12 PM
Last Updated : 23 Oct 2017 12:12 PM

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். 4 பேரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர்.

இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

90% தீக்காயம்:

நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசக்கிமுத்து குடும்பத்தாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. 4 பேருக்கும் 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உறுதி:

பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சினை நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. கந்துவட்டிப் புகார்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, வருவாய்த் துறையினருடன் இணைந்து காவல்துறையில் தனி செல் அமைக்கப்படும். இதற்காகப் பிரத்யேகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும். கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x