Published : 21 Oct 2017 11:47 AM
Last Updated : 21 Oct 2017 11:47 AM

பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ்

கடந்த இரு மாதமாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன் சிறைவிடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராஜீவ் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரணமான சிறை விடுப்பு ஓரிரு நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சிறைவிடுப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார். பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலையில் இந்தக் கோரிக்கை நியாயமானதே.

பேரறிவாளனின் தாய், தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களான அவர்களுக்கு கடைசி காலத்தில் உதவவும், உடனிருப்பதற்காகவும் தான் அவருக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் சிறை விடுப்புக் காலத்தில் அவரது தந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டு, சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும், பேரறிவாளனின் தந்தைக்கு இன்னும் நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தந்தையின் சிகிச்சைகளை தொடரவும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் பேரறிவாளன் உடனிருப்பது உளவியல் அடிப்படையில் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதுமட்டுமின்றி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை குறித்தும், ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தவர்கள் யார்? என்பது குறித்தும் வினாக்களை எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் பேரறிவாளன் தண்டிக்கப் பட்டதற்கான அடிப்படையையே தகர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்குமூலத்தை திரித்து தவறாகப் பதிவு செய்தது தாம் தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐக்கு அவர் கடிதம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பேரறிவாளன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, இப்போது சுதந்திரமான மனிதராக வலம் வந்து கொண்டிருப்பார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து முந்தைய காங்கிரஸ் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவ்வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்துவது மத்திய அரசுதான். தமிழர்கள் விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது.

எந்த அடிப்படையிலும் தண்டிக்கப்பட தகுதியற்ற ஒருவரை 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெயலலிதா இருமுறை அறிவித்த நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களை நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பது தான் முறையாக இருக்கும்.

எனினும் பேரறிவாளனின் தாயார் இந்த வாதங்களையெல்லாம் முன்வைக்காமல், மனித நேயத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தந்தையார் மற்றும் சகோதரியின் மருத்துவம் தொடருவதற்கு வசதியாக சாதாரண சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்படி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரு மாதமாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன் சிறைவிடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x