Published : 20 Oct 2017 04:34 PM
Last Updated : 20 Oct 2017 04:34 PM

யுடர்ன் அடிக்க இது ரீடேக் அல்ல: கமலுக்கு தமிழிசை பதில்

பணமதிப்பு நீக்கத்தை, தான் ஆதரித்தது குறித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு  யுடர்ன் அடிக்க இது ஒன்றும் ரீ டேக் அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:

கமல்ஹாசன் பணமதிப்பு நீக்கம் பற்றி மன்னிப்புக் கேட்பதாகச் சொல்கிறார். உலகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டும் ஒரு விஷயம். பணமதிப்பு நீக்கம் வந்த பிறகுதான் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, கறுப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அத்தகைய ஒரு முக்கியமான நடவடிக்கையை ஆதரித்ததை தவறு என்று மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்.

இவர் யுடர்ன் அடிக்க அது ஒன்றும் ரீடேக் அல்ல. ஆழ்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. ஆழமாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொத்தாம் பொதுவாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கமல்ஹாசன் இது பற்றி அறியாமல் மேம்போக்காகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல், திரைப்பட வசனங்களில் அரசியலை விமர்சிப்பதை பொதுமக்கள் கைதட்டுவதை வரவேற்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.

மக்களைத் தவறாக திசைதிருப்பும் வேலையில் ஈடுபடக் கூடாது. மருத்துவம், கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு. இன்று அரிய வகையைச் சேர்ந்த 200 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இலவசமாக மருத்துவம் அளிக்கவில்லை. சிங்கப்பூரிலிருந்து எனக்கு நிறைய போன் கால்கள் வருகின்றன.  இங்கு 90 சதவீத மருத்துவர்கள் நல்ல சேவையை அளிக்கிறார்கள்.

டிஜிட்டல் பரிவர்த்தனை பல நாடுகளில் பாராட்டப்படும் ஒன்று. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் விமர்சிப்பது பேஷனாகிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை போகிற போக்கில் விமர்சித்துவிட்டுப் போகக் கூடாது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x