Published : 20 Oct 2017 09:37 AM
Last Updated : 20 Oct 2017 09:37 AM

நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்து 8 தொழிலாளர்கள் பலி

உயரதிகாரிகள், அரசின் அலட்சியப் போக்கால் நாகை மாவட்டம் பொறையாறில் ஓய்விடக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

நாகை மாவட்டம் பொறையாறில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு, 1943-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், பணிமனையின் நுழைவாயில் அருகே மேற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான ஓய்வெடுக்கும் அறை உள்ளது.

இங்கு இரவுப் பணி முடிந்து வரும் ஊழியர்களும், அதிகாலை பணிக்குச் செல்ல வேண்டிய ஊழியர்களும் தங்குவது வழக்கம். 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இப்பணிமனையில், ஒரு நாளைக்கு சுமார் 30 முதல் 40 பேர் வரை இக்கட்டிடத்தில் தங்கு வார்கள்.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சுமார் 30 பேர் இந்தக் கட்டிடத்தில் தங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஊழியர்கள் படுத்திருந்த தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளின் பாரம் தாங்காமல் ஊழியர்கள் படுத்திருந்த முதல் மாடியின் தளமும் இடிந்து கீழே விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஊழியர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பலியானவர்கள்

பலியானவர்கள் விவரம்: ஓட்டுநர்கள் கீழப் பெரம்பூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முனியப்பன் (42), செம்பனார்கோவில் காளஹஸ்திநாதபுரம் ஜம்புநாதன் மகன்கள் பிரபாகர் (53), பாலு (51), திருக்குவளை மணக்குடி மாரியப்பன் மகன் அன்பரசன் (25), பொறையாறு தங்கவேல் மகன் தனபால்(49), காலமநல்லூர் வடகட்டளை பொன்னுசாமி மகன் மணிவண்ணன் (52), செம்பனார்கோவில் கீழையூர் ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (44), நடத்துநர் சிக்கல் கோவிந்தசாமி மகன் ராமலிங்கம் (56) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள்.

இதுகுறித்து தகவலறிந்த பொறையாறு மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் காயம்

மேலும், காயமடைந்த குருங்குளம் கீழமாங்குடி வெங்கடேஷ், மேலப்பெரும்பள்ளம் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி பிரேம்குமார் ஆகிய 3 பேரும் மீ்ட்கப்பட்டு காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பழமையான கட்டிடத்தைச் சீரமைக்காத அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த கோரச் சம்பவம் நடந்ததாகக் கூறி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 பேர் பலியான சம்பவத்தால் இப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இந்த விபத்தில் பலியானவர்களில் 2 பேர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.7.5 லட்சம் நிவாரணம் 

கட்டிடம் இடிந்து விழுந்து இறந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x