Last Updated : 20 Oct, 2017 09:08 AM

 

Published : 20 Oct 2017 09:08 AM
Last Updated : 20 Oct 2017 09:08 AM

திருச்சி - நாமக்கல் இடையே மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி பர்வதம் என போற்றப்படும் தலைமலையின் பெருமையைக் குலைக்கும் ஆபத்தான கிரிவலம்

திருச்சி - நாமக்கல் மாவட்டங்களின் இடையே உள்ள தலைமலை பெருமாள் கோயிலைச் சுற்றி, உயிரைப் பணயம் வைத்து பக்தர்கள் மேற்கொள்ளும் ஆபத்து நிறைந்த கிரிவலம், தலைமலையின் பெருமையை குலைப்பதாக அமைந்துள்ளது.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி திருச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் என பசுமைப் போர்வை போர்த்தியபடி காணப்படுகிறது.

இந்தக் காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயர மலையில் தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

தானாக வளர்ந்த பெருமாள்

20ty_ggm_thalaimalai10 பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம் என தலைமலையின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகை. 100 

நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில், தானாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று சுற்றுவட்டார மக்களால் அழைக்கப்படும் நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளுகிறார். மேலும் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும் இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

7 கிமீ நடக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, வடவத்தூர், செவிந்திப்பட்டி, திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி, சஞ்சீவிபுரம் ஆகிய 5 அடிவாரங்களில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவுக்கு நடந்துதான் மலையின் உச்சிக்குச் செல்ல முடியும். எந்தவொரு அடிவாரத்தில் இருந்தும் மலையின் உச்சிக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி கிடையாது. கரடுமுரடான - ஆங்காங்கே செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்துதான் பக்தர்கள் மலைக்குச் சென்று வருகின்றனர்.

அடிவாரத்தில் இருந்து வரும் அனைத்துப் பாதைகளும் தலைமலையில் இருந்து சுமார் 1 கிமீ கீழே உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன. அங்கு குதிரை மீது கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார் கருப்பண்ணசாமி.

பக்தர்களின் நம்பிக்கை

20ty_ggm_thalaimalai04 சுமார் 3,200 அடி உயரமுள்ள தலைமலையின் உச்சியில் பெருமாள் கோயிலைச் சுற்றி கிரிவலம் செல்லும் பக்தர். 100 

ராமாயண போரின்போது மூர்ச்சையடைந்து விழுந்த லட்சுமணனை உயிர்ப்பிக்க ஆஞ்சநேயர் தூக்கிச் சென்ற மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி பர்வதம் என்னும் மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில், மலையை ஆஞ்சநேயர் வீசியெறிந்ததாகவும், அது 7 துண்டுகளாகச் சிதறி விழுந்ததாகவும் அவற்றில் ஒன்று இந்த தலைமலை எனவும் கூறப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் வீற்றிருப்பதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. மலையின் உச்சியில் பெருமாளின் தலம் உள்ளதால் தலைமலை என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

4 அங்குல சுவர் விளிம்பில்

இத்தகைய சிறப்பு பெற்ற தலைமலையின் பெருமையைக் குலைக்கும் வகையில் இங்கு வரும் பக்தர்கள், பெருமாள் மலை உச்சியில் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுக்கு சுமார் 4 அங்குலம் அகலமே உள்ள சுவரின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து வலம்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்தச் செயலை தலைமலை கிரிவலம் என்று கூறுகின்றனர். கிரிவலத்துக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்திருந்தாலும், அதை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிவலம் செல்ல முயன்ற முசிறியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தடையை மீறி கிரிவலம்

இதுதொடர்பாக கருப்பண்ணசாமி கோயில் பூசாரிகளில் ஒருவரான துரைசாமி கூறியபோது, “சனிக்கிழமைகளில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். மலையில் தினமும் ஏறி இறங்க முடியாது என்பதால், நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை மலைக்கு வந்துவிட்டு, திங்கள்கிழமை காலையில்தான் அடிவாரத்துக்குத் திரும்புவோம்.

குறிப்பாக, புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் மிக அதிகளவில் வருவர். பல ஆண்டுகளாகவே இங்கு பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சுற்றுவதை பிரதான நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலாகவும் மேற்கொள்கின்றனர்” என்றார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

தோளூர்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் கூறியபோது, “ பல ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் உட்பட 2 பேர் வெவ்வேறு காலக் கட்டத்தில் கிரிவலம் சுற்றியபோது தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு இப்போதுதான் அதுபோன்ற சம்பவம் நேரிட்டுள்ளது.

அதேபோல அடிவாரத்தில் இருந்து தலைமலைக்குச் செல்லும் வழியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் மலைப் பாதை முழுவதும் காலி தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட் பாக்கெட் உறைகள், டீ கப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பாதையில் இருந்து பிரியும் ஒத்தையடிப் பாதைகள் திறந்தவெளிக் கழிப்பிடமாக உள்ளன. இதனால், தலைமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சக்திவாய்ந்த தலைமலை பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தினாலே வேண்டுதல்கள் நிறைவேறும். தலைமலையின் சிறப்பை, பெருமையைக் குலைக்கும் கிரிவலம் சுற்றுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மாவட்ட வனத் துறையும், கோயில் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தடுப்புகள் அமைப்பு

இதுதொடர்பாக கோயிலின் பரம்பரை அறங்காவலர் நந்தகோபன் கூறியதாவது: தலைமலை பெருமாள் கோயில் வரலாறு குறித்து எங்களுக்கே தெரியவில்லை. ஆனால், சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மலை என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல, மலையின் உச்சிக் கோயிலில் கிரிவலம் செல்வதும் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். சனிக்கிழமைகள் மற்றும் தை திருவோணம், ஆயுத பூஜை, புரட்டாசி, சித்திரைப் பிறப்பு ஆகிய நாட்களில் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

கிரிவலம் செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்து, அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதேவேளையில், அண்மையில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தவிர கிரிவலம் சென்று யாரும் கீழே விழுந்ததாகவோ, விழுந்து உயிரிழந்ததாகவோ இத்தனை ஆண்டுகளில் உறுதியான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், இனி யாரும் கிரிவலம் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் பொருத்தும் பணி மற்றும் சிமென்ட் சுவர் கட்டும் பணி சில தினங்களில் முடிக்கப்படும்.

காப்புக்காட்டுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்களுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் கோயில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய வன அமைச்சகத்தில் அனுமதி வாங்க வேண்டியுள்ளது.

இருப்பினும், மாவட்ட அறநிலையத் துறை, மாவட்ட வனத் துறை ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இதன் முதல்கட்டமாக வடவத்தூரில் இருந்து படிக்கட்டு அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x