Published : 18 Oct 2017 10:38 AM
Last Updated : 18 Oct 2017 10:38 AM

தனது வசீகர குரலால் அனைவரையும் கவர்ந்து இந்திய நைட்டிங்கேலாக திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

தனது வசீகரக் குரலால் இந்தியாவின் நைட்டிங்கேலாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.

மறைந்த கர்னாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள் நூற்றாண்டு விழா கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியைத் தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவையொட்டி ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில், எம்.எஸ். உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. ‘பாரத ரத்னா’, ‘ராமன் மகசேசே’ விருதுகளைப் பெற்றவர். அவரது இசை ரசிகர்கள், நாடு முழுவதும் உள்ளனர். எனவே, இக்கண்காட்சியை ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்த வேண்டும்.

எம்.எஸ்.ஸின் இசையை மகாத்மா காந்தி முதல் சாதாரண மனிதர் வரை அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். மேல் திருப்பதி கோயிலில் இன்றும் எம்.எஸ். சுப்ரபாதத்துடன்தான் சேவை தொடங்குகிறது. அவர் சிறந்த தேசபக்தர். இசைத் துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். பாரதியாரின் தேசபக்திப் பாடல்களை உணர்வுப்பூர்வமாகப் பாடினார்.

கவிதையில் இந்தியாவின் நைட்டிங்கேலாக சரோஜினி நாயுடு திகழ்ந்ததுபோல, தனது வசீகரக் குரலால் இந்தியாவின் நைட்டிங்கேலாக எம்.எஸ். இருந்தார். எம்.எஸ். போல நாமும் சாதிக்க வேண்டும் என்று 10 பேராவது உத்வேகம் பெற்றால், அதுவே இந்த விழாவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்திராகாந்தி கலை மைய உறுப்பினர் செயலர் சச்சிதானந்த் ஜோஷி, லலித் கலா அகாடமி நிர்வாகி கிருஷ்ண செட்டி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள் நூற்றாண்டு விழா கண்காட்சியில் அவரது இசைப் பயணம் குறித்த புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. 1936-1987 காலகட்டத்தில் எப்போது, எங்கு இசை நிகழ்ச்சி நடத்தினார் என்ற பட்டியலும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

தமிழில் படிக்க வேண்டும்

முன்னதாக, தி.நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா சமிதியில், மறைந்த காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. சமிதி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள தக்கர்பாபாவின் சிலை, நிர்மலா தேஷ்பாண்டே பெயரிலான மகளிர் விடுதி ஆகியவற்றை வெங்கய்ய நாயுடு திறந்துவைத்தார். ஹரிஜன சேவா சங்கம், தக்கர்பாபா வித்யாலயா சமிதிக்கு உதவி செய்த சேவாலயா அமைப்பு, தனியார் நிறுவனங்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட 32 பேருக்கு மனிதநேய விருதுகளை வழங்கிப் பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

நிர்மலா தேஷ்பாண்டேவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். காந்தியின் கொள்கையான கிராம ராஜ்ஜியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் பாதயாத்திரை நடத்தினார். மற்றவர்களுக்கு உதவி செய்வது கடவுளுக்கு உதவி செய்வது போன்றது. எனவே, தக்கர்பாபா வித்யாலயா சமிதிக்கு அனைவரும் உதவ வேண்டும். காந்தியின் போதனைகள் காலத்தை தாண்டி நிலைக்கக் கூடியவை. அவரது போதனைகளைப் பரப்ப வேண்டும்.

பிரான்ஸ், சீனா, ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இந்தியா வந்தபோது அவரவர் தாய்மொழியிலேயே பேசினர். தாய்மொழி, தாய்நாட்டை மறந்தால் மனிதனாகவே இருக்க முடியாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிப் படிப்பு வரையாவது தமிழில் படிக்கவைக்க வேண்டும். தமிழகத்தை தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் மற்ற மொழிகளையும் கற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் டி.ஜெயக்குமார், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் சங்கர்குமார் சன்யால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x