Published : 17 Oct 2017 09:24 AM
Last Updated : 17 Oct 2017 09:24 AM

மழைக்காலம் தொடங்க இருப்பதால் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய குழு அறிவுரை

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய குழுவினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் கடந்த 13-ம் தேதி சென்னை வந்தனர். டெங்கு பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் 2 குழுக்களாக பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் மருத்துவமனைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இவை தவிர டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்த குழுவினர், எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். தமிழகத்தில் 2 நாள் ஆய்வை முடித்துக் கடந்த 14-ம் தேதி இரவு குழுவினர் புதுச்சேரி சென்றனர். புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வை முடித்துக் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை இன்று மத்திய அரசிடம் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

மத்திய குழுவினர் சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மருத்துவமனைகளுக்கு சென்ற குழுவினர் ஒவ்வொரு நோயாளியாக பார்த்தனர். அவர்களின் பாதிப்பு குறித்து தெரிந்து கொண்டனர். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. அதனை தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். வாரம்தோறும் வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவது நல்ல முயற்சி. வியாழக்கிழமை முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடலாம்” என்று குழுவினர் தெரிவித்தனர்.

குழுவினர் வழங்கிய ஆலோசனைகளின்படி நாங்கள் செயல்படுவோம். தமிழகத்துக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.256 கோடியை மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறோம். கூடுதலாக 2 ஆயிரம் செவிலியர்கள், மருந்துகள், புகைத் தெளிப்பான் போன்றவைகள் மற்றும் 1,240 சுகாதார ஆய்வாளர்களுக்கு உதவி கோரியுள்ளோம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற வகையான காய்ச்சல்களால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு உள்ளிட்ட எல்லா காய்ச்சலையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா புரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தோம். சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் டெங்கு பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். சென்னை, சேலத்தில் டெங்குவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று தெரியவில்லை.

கொசு உற்பத்தியாகும் இடங்கள் தெரிந்திருந்தும், அதனை ஒழிப்பதற்கான முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. பொதுமக்களின் பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் மாற்ற வேண்டும். அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற வேண்டும். அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால், தற்போது எடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல் தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள், செவிலியர்களுக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கல்பனா புரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x